தீபாவளி பண்டிகை முடிந்த மறுதினம் ஜவுளி நிறுவனங்களின் சலுகை விலை அறிவிப்பால் ஈரோட்டில் கடைவீதியில் புத்தாடைகளை வாங்க மக்கள் கூட்டம் விடிய விடிய அலை மோதியது.
புத்தாடை, பட்டாசு, இனிப்பு என உற்சாகமான கொண்டாட்டத்துடன் தீபாவளி பண்டிகை நேற்று முடிவடைந்தது. இதற்காக கடந்த ஒரு வார காலமாகவே கடைவீதிகளில் தீபாவளிக்கான பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்று பண்டிகையை கொண்டாடினர். குறிப்பாக புத்தாடைகளைப் பொறுத்தவரை ஒரு வாரம் முன்னதாகவே எங்கே வாங்கலாம், எந்த இடத்தில் குறைந்த விலையில் ஆடைகள் கிடைக்கும், எங்கெல்லாம் நிறைய சலுகைகள் தருகிறார்கள் என அலசி ஆராய்ந்து மக்கள் ஷாப்பிங் செய்தனர். வழக்கமாக தீபாவளிக்கு முதல் நாள் ஆடை வாங்க கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுவதைப் பார்த்திருப்போம்.
ஆனால் ஈரோட்டில் வழக்கத்திற்கு மாறாக தீபாவளியை முடித்துவிட்டு மக்கள் ஆடைகளை வாங்க போட்டா போட்டி போட்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவும் புத்தாடைகள் வாங்குவதற்காக ஈரோடு நகர பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் என்பது அதிகரித்து காணப்படும். சற்று மாறுதலாக வந்து தீபாவளி பண்டிகை நிறைவடைந்து மறுநாள் அதிகாலை அதாவது அதிகாலை 2 மணி முதலே மக்கள் ஆடைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால், தீபாவளிக்கு மறுநாள் பல்வேறு ஜவுளி கடைகளிலும் 30 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தள்ளுபடியில் ஆடைகள் விற்பனை செய்யப்படும்.
இதையும் படிங்க: ஈரோடு நாகமலை குன்று: தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிப்பு! தமிழக அரசு அதிரடி..!!
கடந்த ஆண்டுகளை போலவே, இந்த ஆண்டும், தீபாவளி முடிந்த நிலையில், ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள் சலுகை விலையில் ஜவுளி விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது. இதனால் ஏராளமானோர் கடைவீதியில் குவிந்தனர். நள்ளிரவு முதல் கூட்டம் கூட்டமாக காத்திருந்து கடைகள் அதிகாலை 4 மணிக்கு திறந்ததும் முண்டியடித்து உள்ளே சென்று ஜவுளிகளை வாங்கி சென்றனர்.
ஈரோடு மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் வந்திருந்தவர்கள் கடைகள் திறந்ததும் முண்டியடித்து உள்ளே சென்றனர். இதனால் ஜவுளி கடைகள் நிறைந்த RKV சாலையில் கூட்ட நெரிசலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துகுமரன் தலைமையில் 100.க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜவுளிகளை குறைந்த விலையில் வாங்குவதால் ஆண்டுதோறும் இதனை பயன்படுத்திக்கக் கொள்ளக்கூடும் எனவும், அதேபோல் அடுத்தடுத்து வரக்கூடிய சுப நிகழ்ச்சிகள், பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு இந்த புத்தாடைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற சிறப்பு தள்ளுபடி சமயங்களில் ஆடைகளை வாங்குவதால், ஒரு குடும்பத்திற்கு 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் வரை சேமிப்பு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குறுக்க இந்த கௌசிக் வந்தா! திடீரென ஓடிவந்த நாய்... நூலிழையில் உயிர் தப்பிய இருவர்...!