திருப்பூர் மாவட்டத்தில் ஓடும் நொய்யல் ஆற்றில் வடகிழக்கு பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, ஆற்றில் அதிக அளவில் வெள்ளை நுரை பொங்கி வழிந்தது. இது மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது. சூழலியல் ஆர்வலர்களும் விவசாயிகளும் இதற்கு திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் ஜவுளித் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயனக் கழிவுநீரே முக்கியக் காரணம் என்று குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் ராஜீவ் திருப்பூருக்கு வந்து காசிபாளையம் பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நொய்யல் ஆற்றில் நுரை பொங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அமைச்சர் ராஜீவ் அளித்த விளக்கம் பரபரப்பை ஏற்படுத்தியது. “குளியலறைகளில் இருந்து வரும் கழிவுநீர் ஆற்றில் கலக்கும்போது நுரை வரலாம். நாம் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம்.

தண்ணீர் உயரத்திலிருந்து கீழே விழும்போது இயல்பாகவே நுரை பொங்கும்” என்று அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலகலப்பான பாணியில் பதிலளித்தார். “உலகமே வியக்கும் வகையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அவருக்கு நோபல் பரிசுதான் கொடுக்க வேண்டும். உலக மக்கள் அனைவரும் குளிப்பதற்குப் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்பியினால்தான் ஆற்றில் நுரை வருகிறது என்று ஒரு அமைச்சர் சொல்கிறார். இந்த நாட்டில் எப்படிப்பட்டவர்களையெல்லாம் நாங்கள் பார்க்க வேண்டியுள்ளது!” என்று அவர் கிண்டலாகக் கூறினார்.தனது முந்தைய அனுபவங்களையும் நினைவுகூர்ந்த செல்லூர் ராஜூ, “நான் அமைச்சராக இருந்தபோது எகிப்தை ஈஜிப்ட் என்று சொன்னதற்காகவும், ஆற்றில் தெர்மாகோல் போட்டதற்காகவும் என்னை எப்படியெல்லாமோ கிண்டல் செய்தார்கள்.
இதையும் படிங்க: ஆப்பிரிக்காவாக மாறுகிறதா தமிழ்நாடு?... தவெக அரசுக்கு ஆர்.பி. உதயகுமார் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்...!
இப்போது இந்த அமைச்சரைப் பார்த்து எங்கே போனீர்கள்? எதுவும் சொல்ல மாட்டீர்களா? அட என்னங்கப்பா போங்கப்பா… அழுவ விடுறீங்கப்பா” என்று நகைச்சுவையாகப் பேசினார். தெர்மாகோல் யோசனையைத் தான் சொல்லவில்லை, அதிகாரிகள் பரிந்துரைத்ததால்தான் அதைச் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "BLACK TICKET"..! பழக்க தோஷத்துல வித்துடாதீங்க..! ஆவின் பொருட்கள் விலை உயர்வு.. EPS விளாசல் .!!