தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவை விவசாயிகளுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகத் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்கள், கடந்த ஐந்தாண்டு காலத் திட்டங்களின் தொகுப்பாகவும், மறுவாசிப்பாகவுமே உள்ளது. கூட்டுறவு கடன் தள்ளுபடி, கல்வி கடன் தள்ளுபடி மற்றும் 1,000 தடுப்பணைகள் கட்டும் பணி போன்ற முக்கிய வாக்குறுதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

2021 தேர்தல் அறிக்கையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்வதாக திமுக உத்தரவாதம் அளித்தது; ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்பு இல்லை. திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேறுவதுதான் நல்லது எனக் கூறியிருப்பது விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் செயல்.
இதையும் படிங்க: “அமெரிக்காவின் தடையற்ற வர்த்தகத்தால் இந்திய விவசாயம் அழியும்!” பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை!
விவசாயத்தால் வேலைவாய்ப்பு கிடையாது என்கிற அவரது கருத்து, விளைநிலங்களை அபகரிக்க நினைக்கும் கார்ப்பரேட் கொள்கையின் வெளிப்பாடாகும். இதற்காக ஜெயரஞ்சன் விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என பி.ஆர். பாண்டியன் எச்சரித்துள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதில்லை; மாறாகக் காப்பீடு நிறுவனங்களை அரசியல்வாதிகள் தனதாக்கிக் கொண்டதாக அதிர்ச்சித் தகவல்கள் வருகின்றன. பேரிடர் மேலாண்மை நிதி அறிவிப்போடு நின்றுவிடுகிறது, விவசாயிகளுக்குப் பயன் கிடைப்பதில்லை.
இதையும் படிங்க: கனிம வளக் கொள்ளை: பிப்ரவரி 7-ல் கன்னியாகுமரி டூ காஷ்மீர் வரை விவசாயிகள் பேரணி!