தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிப்பதற்கு பெயர் பெற்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சாத்தூர், மற்றும் அருப்புக்கோட்டை போன்ற பகுதிகளில் பட்டாசு உற்பத்தி ஒரு முக்கிய தொழிலாக விளங்குகிறது. இந்தியாவின் பட்டாசு தேவையில் கணிசமான பங்கு இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், இந்தத் தொழில் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் அதே வேளையில், அடிக்கடி நிகழும் வெடி விபத்துகள் தொழிலாளர்களின் உயிர்களைப் பறிப்பதோடு, பல குடும்பங்களைப் பேரழிவில் ஆழ்த்தி வருகின்றன.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மூலம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. எவ்வளவு வருமானம் இருக்கிறதோ அவ்வளவு ஆபத்தும் இந்த தொழிலில் இருக்கிறது. இப்படி ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை வரை 7 மாதங்களாக அடுத்தடுத்து தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி.. முதல்வர் மு.க ஸ்டாலின் சொன்ன முக்கிய தகவல்..!!
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தில் இன்று காலை சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிக்கப்பட்டபோது ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் உயிரிழந்தனர். கீழகோதை நாச்சியாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் (21), விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (70), சண்முகத்தாய் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், மாரியம்மாள் என்ற பெண் 90% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்சார உராய்வு காரணமாக பட்டாசுகள் வெடித்து சிதறியதால் இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து விரைந்து வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. வீட்டின் உரிமையாளர் பொன்னுபாண்டி மீது சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்ததாக வச்சக்காரப்பட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். அதேபோல், காயமடைந்தவருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், 90% தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் மாரியம்மாள் என்ற பெண்ணுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வருக்கு தலைசுற்றல் வந்தது ஏன்..?? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்..!!