குஜராத் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை சீரழிவை ஏற்படுத்தியுள்ளது. சூரத், அகமதாபாத், கேடா, தபி, டாங்ஸ், வால்சாட் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளக்காடாக மாறிய நிலையில், மக்கள் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்க போராடி வருகின்றனர். நேற்று மாலை வரை இடைவிடாத மழை பெய்ததால் ஆறுகள் உடைந்து கிராமங்கள் மற்றும் நகர்ப்பகுதிகள் வெள்ளத்தில் திணறின.
குறிப்பாக வால்சாட் மாவட்டத்தின் உம்பேர்கான் தாலுகாவில் 36 மணி நேரத்தில் சுமார் 1,200 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) ஆகியவை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. நவ்சாரி மற்றும் வால்சாட் மாவட்டங்களில் இந்திய ராணுவத்தின் படைகளும் குவிக்கப்பட்டு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் சிக்கிய மக்களை மீட்டு, உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் பணி தொடர்கிறது.
இதையும் படிங்க: குஜராத்தில் பயங்கரம்..!! பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!! 8 பேர் பரிதாப பலி..!!

மழை பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல், மின்விநியோகத் தடை உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்பட்டுள்ளன. அகமதாபாத்தில் 22 தாலுகாக்களில் 12 மணி நேரத்தில் 200 மில்லிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இந்திய வானிலை மையம் (IMD) இன்று வரை பரூச், சூரத், நவ்சாரி, வால்சாட், டாங்ஸ், நர்மதா, வதோதரா, சோட்டா உதேபூர், பஞ்ச்மஹால், தாஹோத் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலுடன் தொலைபேசியில் உரையாடினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என உறுதியளித்தார். மாநில அரசும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது.இந்த திடீர் வெள்ளப் பாதிப்பால் விவசாய நிலங்கள், சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். மழை தொடரும் நிலையில், மேலும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டுநர்களுக்கு சொந்தமான ‘பாரத் டாக்ஸி’ சேவை..!! குஜராத்தில் தொடங்கி வைத்தார் அமித் ஷா..!!