காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை மூலம் தமிழகத்திற்குச் சாதகமான நல்ல தீர்வு கிடைக்கும் எனத் தீவிர நம்பிக்கை இருப்பதாக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் பொருளாதார நிபுணரும் காங்கிரஸ் பிரமுகருமான ஆனந்த் சீனிவாசன் எழுதிய 'ஃபிரீ மணி' (Free Money) புத்தகத்தை வெளியிட்ட பின்னர், மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்ரவர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது மேகதாது விவகாரம் குறித்துப் பேசிய அவர், "மேகதாதுவில் கர்நாடக அரசு ஒரு செங்கலைக் கூட வைக்க விட மாட்டோம் என்பதில் தமிழகக் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் கர்நாடகா செல்வது குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதியான தகவல் எதுவும் இன்னும் வரவில்லை. இருப்பினும், கடந்த காலத்தில் தமிழக முதலமைச்சர்களாக இருந்த செல்வி ஜெயலலிதா மற்றும் திரு. மு.க.கருணாநிதி ஆகியோரும் கர்நாடக முதலமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: கர்நாடக முதலமைச்சருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்! காவிரியில் பங்கு நீரை பெற தவெக அரசுக்கு வலியுறுத்தல்!
ஆனால், இம்முறை சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தேசியக் கட்சியான காங்கிரஸ், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியில் பங்கு வகிக்கிறது. அதனால் மக்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பும் கடமையும் எங்களுக்கு உள்ளது. இரு மாநில முதலமைச்சர்கள் இடையேயான பேச்சுவார்த்தை தமிழகத்தின் நலனுக்கு உரிய தீர்வைத் தரும் என நம்புகிறோம்" என்றார்.

முதல்வர் விஜயின் கர்நாடகப் பயணத்தைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த விமர்சனங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "எந்த அடிப்படையில் அவர் அப்படிச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் பயனுக்காகவுமே நாங்கள் பேசுகிறோம். இந்த விவகாரம் தொடர்பாகப் நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து நீட் தேர்வு குறித்துப் பேசிய அவர், "மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மட்டும் தீர்வாகாது. நீட் வினாத்தாள் கசிவுப் பிரச்சனைகள் நீடிக்கும் சூழலில், நீட் தேர்வே கூடாது என்பதே எங்களின் தெளிவான நிலைப்பாடு. மேலும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
மாநிலத்தின் நிதிநிலை குறித்துப் பேசுகையில், "தமிழகத்தின் வரி வருவாய் மூலம் கஜானாவிற்கு வரும் வருவாய் வளர்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளில் 8 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதனால் சுமார் ₹70,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு செலவினங்களை யோசிப்பது போலவே, கஜானாவிற்கு கூடுதல் வருவாயைக் கொண்டு வருவதிலும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்" என வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மாநில உரிமைகளை தொட்டால் விடமாட்டோம்! புதிய சட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை!