சென்னை பிராட்வே கோழி மார்க்கெட் மற்றும் மஸ்கான் சவாடி அம்மன் தெரு பகுதிகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதியின்றிச் செயல்பட்டு வந்த சட்டவிரோத செல்லப்பிராணிகள் மற்றும் பறவைகள் விற்பனைச் சந்தைக்குப் பெருநகர சென்னை மாநகராட்சி முழுமையாகத் தடை விதித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ எச்சரிக்கை அறிவிப்புப் பலகையை அப்பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பிராட்வே பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் மற்றும் விதவிதமான வெளிநாட்டுப் பறவைகள் சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு இடையூறுகள் ஏற்பட்டு வந்தன.

குறிப்பாக, ஹைதராபாத், மும்பை போன்ற வெளி மாநிலங்களில் இருந்து முறையான ஆவணங்களோ அல்லது வனத்துறை அனுமதியோ இன்றி இந்த உயிரினங்கள் கடத்தி வரப்படுவதாகவும், தாயிடமிருந்து முன்கூட்டியே பிரிக்கப்பட்ட பச்சிளம் குட்டிகள் காற்றோட்டமில்லாத அட்டைப் பெட்டிகளிலும் பைகளிலும் கொடூரமான முறையில் அடைத்து வைக்கப்படுவதாகவும் விலங்கு நல ஆர்வலர்கள் நீண்ட நாட்களாகக் குற்றம்சாட்டி வந்தனர். மேலும், முறையான தடுப்பூசி மற்றும் மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ்கள் இன்றி இந்த விலங்குகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், ஆபத்தான ரேபீஸ் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பொதுமக்களுக்குப் பரவும் அபாயமும் நிலவி வந்தது.
இதையும் படிங்க: மாத இறுதிக்குள் சொத்து வரி செலுத்தினால் 5% தள்ளுபடி..!! மாநகராட்சி அறிவிப்பு..!!
இவை அனைத்திற்கும் மேலாக, நூற்றுக்கணக்கான பிராணிகளின் எச்சங்கள் மற்றும் கழிவுகள் சாலைகளிலேயே கொட்டப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்படாததால், ஒட்டுமொத்தக் குடியிருப்புப் பகுதியிலும் சகிக்க முடியாத அளவுக்குத் துர்நாற்றம் வீசி வந்ததுடன், கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வந்தது.
குடியிருப்புவாசிகளின் தொடர் புகார்களை அடுத்து களமிறங்கிய சென்னை மாநகராட்சி ஆணையர், இப்பகுதியில் இயங்கும் சட்டவிரோத பிராணிகள் சந்தைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் தடையை மீறி பிராணிகள் மற்றும் பறவைகளை விற்பனை செய்ய முயன்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது இந்திய விலங்கு வதை தடுப்புச் சட்டம் மற்றும் மாநகராட்சி விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மிகக் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்களே கவனிங்க... சொத்துவரி செலுத்த இன்றே கடைசி நாள்..! சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்.!!