தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபரும், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான 84 வயதான வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகளான மகேந்திர சிம்மன், சாந்தி தம்பதியினர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வழக்கில் நான்காவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
1980-களில் இந்திய கிரானைட் தொழிலை உலக அளவுக்கு கொண்டு சென்ற முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் வீரமணி, சென்னை தேனாம்பேட்டையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாகப் பொறுப்பை சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் தம்பதியிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.
அந்த வீட்டில், இடைத்தரகர்கள் மூலம் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை கல்வி உதவித்தொகை வழங்குவதாகக் கூறி அழைத்து வந்து, வீரமணி மற்றும் அவரது தொழிலதிபர் நண்பர்களுடன் சேர்ந்து அவர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. இணையத்தில் வெளியான அந்த வீடியோவால் பரபரப்பு..!!
மேலும், அங்கு நடைபெற்ற பாலியல் அத்துமீறல்களை சாந்தி ரகசிய கேமரா மூலம் வீடியோவாக பதிவு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
2025 அக்டோபர் மாதம், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவரிடம் கிடைத்த பென் டிரைவில், 2019-ம் ஆண்டு 13 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி போலீசார் வழக்கை முடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து சென்னை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, வீரமணி, சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில், போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கில் கணேசன் என்பவரை போலீசார் தற்போது நான்காவது நபராக கைது செய்துள்ளனர்.
வீரமணியின் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தில் 23 ஆண்டுகள் பணியாற்றிய கணேசன், தற்போது பாலாஜி குளோபல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவை தனது செல்போனில் வைத்திருந்ததுடன், அது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவிக்காமல் இருந்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு இந்த வழக்கை மூடி மறைப்பதற்காக வீரமணி வழங்கியதாக கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சப் பணம், கணேசனின் வங்கி கணக்கு மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகனின் நண்பராக கணேசன் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்சப் பணத்தை பல்வேறு நபர்களுக்கு விநியோகிப்பதில் கணேசனுக்கு முக்கிய பங்கு இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்து சைபர் ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர். அந்த வீடியோவை அவருக்கு அனுப்பியது யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, கணேசனின் நண்பரான ரயில்வே தொழிற்சங்க நிர்வாகியின் மகனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், அவர் வெளிநாடு சென்றிருப்பதாகக் கூறி அவரது குடும்பத்தினர் சம்மனைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், கடந்த ஆண்டு சாந்தியிடம் விசாரணை நடத்தச் சென்ற அப்போதைய உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் மற்றும் போலீஸ் வீடியோ ஒளிப்பதிவாளர் ஆகியோர் பதிவு செய்ததாக கூறப்படும் வீடியோ ஆதாரம் தற்போது எங்கே உள்ளது என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதுவரை 13 வயது சிறுமி உட்பட 9 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மேலும் பாதிக்கப்பட்ட பெண்களை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த பாலியல் வன்கொடுமைகள் தேனாம்பேட்டையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் மட்டுமின்றி, வீரமணியின் சொந்த வீடு, அலுவலகம், சென்னை புறநகர் பகுதியில் உள்ள விருந்தினர் இல்லம் மற்றும் பல்வேறு தங்கும் விடுதிகளிலும் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், 2003-ம் ஆண்டு இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்த தகவல்களும், அதற்கு முன்பே பல பெண்கள் ஏமாற்றப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்களும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
ஏற்கனவே வீரமணியை போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து, 100 கேள்விகள் அடங்கிய பட்டியலை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து, மகேந்திர சிம்மன் மற்றும் சாந்தி ஆகிய இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், லஞ்சப் பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் ஆணையர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் இந்த வழக்கை கையாண்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் தற்போது சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜெம் வீரமணி விவகாரம்... யாரும் தப்பிக்க முடியாது..! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!