திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர் (AIU) மேற்கொண்ட அதிரடி சோதனைகளில், சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பிலான தங்கப் பசை மற்றும் கணக்கில் வராத வெளிநாட்டுப் பணம் ஆகியவை மொத்தமாகப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாக 4 விமானப் பயணிகளைப் பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் சர்வதேச விமானங்களின் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாகவும், அதேபோல் இங்கிருந்து வெளிநாட்டுப் பணம் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாகவும் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய மற்றும் புறப்படத் தயாராக இருந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து தீவிர சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.3.4 கோடி கஞ்சா பறிமுதல்! சென்னை பெண் பயணி கைது!
இந்தச் சோதனைகளின் போது, பயணிகளின் உடைமைகள் மற்றும் ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.64.45 லட்சம் மதிப்பிலான தங்கப் பசை மற்றும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெளிநாட்டுப் பணத்தின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட 4 பயணிகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் சர்வதேசக் கடத்தல் கும்பலின் ஏஜெண்டுகளாகச் செயல்பட்டார்களா அல்லது இதன் பின்னணியில் உள்ள முக்கிய நபர்கள் யார் என்பது குறித்து வான் நுண்ணறிவுப் பிரிவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆயுத பூஜை சிறப்பு ரயில்கள்: சென்னை, திருச்சி, மானாமதுரை இடையே தெற்கு ரயில்வே அறிவிப்பு!