தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற ‘ஆண்டிபட்டி அண்ணா கூட்டுறவு நூற்பாலையில்’ கைத்தறி மற்றும் கதர்துறை அமைச்சர் விஜய் பாலாஜி இன்று நேரிடையாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த கைத்தறி அமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.
ஆலையின் உள்ளே சென்று ஆய்வு நடத்திய அமைச்சர் விஜய் பாலாஜி, அங்கு உற்பத்தி செய்யப்படும் பஞ்சு நூல்கள் மற்றும் கலவை நூல்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, நூற்பாலையில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வரும் தற்காலிகத் தொழிலாளர்கள் தங்களை முறைப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள சம்பளக் குறைவுப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் நேரிடையாகக் கோரிக்கை விடுத்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த அமைச்சர், இதுகுறித்து உரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய் பாலாஜி கூறியதாவது: "கடந்த ஆண்டை விட இந்த நடப்பு ஆண்டில் இந்த கூட்டுறவு நூற்பாலையின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே, ஆலையின் மின் உற்பத்தியை அதிகரித்து, நூல்களின் தரத்தை உலகளாவிய அளவிற்கு உயர்த்துவது குறித்து அதிகாரிகளுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். நலிவடைந்து வரும் நெசவாளர் தொழிலுக்கு ஊக்கமளித்து, இத்துறையை மேம்படுத்துவதே எங்கள் அரசின் முக்கிய நோக்கமாகும். தனியார் நிறுவனங்களுக்கு நிகராக இந்த அரசு ஆலையின் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதே எங்களது பிரதான இலக்கு" என்று அவர் கூறினார். இந்த ஆய்வின் போது நூற்பாலை உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: உள்ளூர் மக்களுக்கு வேலை; ஏழைகளுக்கு சொந்த வீடு! அரியலூர் சிமெண்ட் ஆலைகளுக்கு அமைச்சர் பிரபு உத்தரவு!
இதையும் படிங்க: அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவப் பணியில் ஈடுபடக் கூடாது..!! அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்..!!