ஒரே நாளில் பத்து பாலியல் கொடூரங்கள் நடைபெற்று இருப்பதாக கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பெண்மை போற்றப்படும் தமிழகத்தில், ஒரே நாளில் பத்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றார்.
திண்டுக்கல் பேருந்து நிலையம் முதல் சென்னை மெரினா வரை பள்ளிச் சிறுமிகள், கல்லூரி மாணவிகள், தூய்மைப் பணியாளர்கள் என எவருக்கும் திரு. ஜோசப் விஜய் அவர்கள் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்பதை இக்கொடூரங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவதாக தெரிவித்தார். மேடைகளில் வாய்ச்சவடால் பேசும் முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் கண்முன்னே சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதைக் கண்டும் மௌனம் காப்பது ஏன்? என்று கேட்டு உள்ளார்.

கிருஷ்ணகிரியில் ஒரு பெண் மானத்தைக் காக்கத் தற்கொலைக்கு முயலும் அவலமும், மெரினாவில் "வேலை முக்கியம்தான், ஆனால் மானத்தை அடகு வைக்க முடியாது" என்று கதறும் ஒரு ஏழைத் தாயின் அபயக்குரலும் முதலமைச்சரின் காதுகளில் விழவில்லையா? என்று கேட்டார். குற்றவாளிகள் காவல்துறையின் மீது பயமின்றித் திரிவது இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசின் வஞ்சனை..! நயினார் கண்டனம்.!
எனவே பெண்களின் பாதுகாப்பைக் கேலிக்கூத்தாக்கிய தவெக அரசுக்கு என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உடனடியாகக் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இனியாவது முதலமைச்சர் விஜய் தனது மௌனத்தைக் கலைத்து காவல்துறையைத் தட்டி எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: என்ன முதல்வரே இதெல்லாம்..? திருச்செந்தூர் கோவில் சேவை கட்டணம் உயர்வு..? நயினார் கண்டனம்..!!