பல ஆண்டுகாலமாக நிகழ்ந்து வந்த வரதட்சணை கொடுமைகள் குறைந்து விட்டதாக சொல்லப்பட்டாலும், படித்தவர்கள் கூட சில நேரங்களில் வரதட்சணை கேட்டு தனது மனைவியை கொடுமைப்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் மதுரையில் காவலராக பணிபுரிந்து வருபவர் தனது மனைவிக்கு நீண்ட நாட்களாக வரதட்சணை கொடுமை கொடுத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவருக்கு தங்க பிரியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தங்க பிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் தனது மனைவி தங்க பிரியாவுக்கு காவலர் பூபாலன் நீண்ட நாட்களாக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடும் நிகழ்ந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பூபாலன் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் பலத்த காயமடைந்த தங்க பிரியா மதுரை அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: எங்களுக்கு நீதி வேண்டும்.. எரித்துக் கொல்லப்பட்ட ஐடிஐ மாணவரின் உறவினர்கள் மறியல் போராட்டம்..!
இந்த சம்பவம் தொடர்பாக தங்க பிரியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருமணத்தின்போது 60 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் மற்றும் சீர்வரிசை உள்ளிட்டவைகளை வழங்கினோம். ஆனால், மேலும் வரதட்சணை வேண்டும் என்று கூறி தனது மகளை காவலர் பூபாலன் கடுமையாக தாக்கினார் என புகாரில் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில் காவலர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பூபாலனின் தந்தை செந்தில்குமரன், அவரது மனைவி விஜயா, மகள் அனிதா ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தனது மனைவியை தாக்கியது தொடர்பாக தன் தங்கையிடம் பூபாலன் பேசிய ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதில் அவர் மனைவியை கடுமையாக தாக்கியது பற்றி சிறிதும் கவலையின்றி, நகத்தால் கடுமையாக கீறியதாகவும், முகத்தில் காயம் ஏற்படுத்தியதாகவும், தொண்டையை இறுக்கினேன், கால்களில் தாக்கி நடக்க முடியாமல் செய்தேன், உதட்டில் காயம் ஏற்படுத்தினேன் எனவும் சிரித்துக்கொண்டே பேசியுள்ளார். மேலும் தனது மனைவியை அடித்து கையே வலித்து விட்டதாகவும் அவர் கூறியது அந்த ஆடியோவில் உள்ளது.
இந்த ஆடியோ வைரலானதை தொடர்ந்து, இதனை விசாரித்த மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார், குற்றம் சாட்டப்பட்ட பூபாலனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதே போல் வரதட்சணை கொடுமை புகாரில் அப்பெண்ணின் மாமனாரான இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதனிடையே காவலர் பூபாலன் மற்றும் அவரது தந்தையை பிடிக்க 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பூபாலனை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நண்பா.. நண்பீஸ் இனி வரலாறு பேசும்..! தவெக 2வது மாநாடு அறிவிப்பை பகிர்ந்த விஜய்..!