தமிழகத்தில், திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் மாவட்டங்களில், சில இடங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், சுரங்க பணிகளை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல், தமிழக அரசு திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விலைமதிப்புள்ள கனிமங்கள் கிடைத்து வருகின்றன. சேலம், நாமக்கல் போன்ற இடங்களில் இரும்புத்தாது, மெக்னசைட், கோவையில் சுண்ணாம்புக்கல், அரியலூர், திருச்சியில் புதை சுண்ணாம்புக்கல், கடலூரில் பழுப்பு நிலக்கரி போன்றவை எடுக்கப்படுகின்றன. மேலும், டெல்டா மாவட்டங்களில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாய்ப்புகள் உள்ளன.
இத்தகைய கனிமங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பது மத்திய அரசின் புவியியல் ஆய்வு நிறுவனம் (GSI). சுரங்க அனுமதி வழங்குவது தமிழக கனிம வளத்துறை. கனிமங்கள் எடுப்பதன் மூலம் அரசுக்கு உரிமைத்தொகை வருவாய் கிடைப்பதால், பொதுவாக அரசு இதில் ஆர்வம் காட்டும்.
இதையும் படிங்க: “மோடி, அமித் ஷா படையெடுத்து வந்தாலும் அது மட்டும் நடக்காது...” - பாஜகவிற்கு அமைச்சர் ரகுபதி பகிரங்க சவால்...!
இந்நிலையில், திருவண்ணாமலை (துரைபாடி போன்ற இடங்கள்), நாமக்கல் (சித்தம்புண்டி), திருப்பூர் (திருமங்கலம் போன்ற பகுதிகள்) மாவட்டங்களில் பிளாட்டினம் தொகுதி கனிமங்கள் (பிளாட்டினம், பல்லேடியம், ஆஸ்மியம், இரிடியம், ரோடியம், ருத்தேனியம்) இருப்பது GSI ஆய்வில் உறுதியாகியுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை 2016-இல் தமிழக அரசுக்கு அளிக்கப்பட்டது.
பிளாட்டினம் தொழில்துறை, மருத்துவம், மின்னணு பொருள்கள், ஆபரணங்கள் தயாரிப்பில் மிகவும் தேவையானது. அதிக விலைமதிப்பு கொண்ட இக்கனிமத்தை எடுக்க சுரங்க அனுமதி வழங்குவதில் தமிழக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க சர்ச்சை போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனிம வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர் மாவட்டங்களில் பிளாட்டினம் தொகுதி கனிமங்கள் உறுதியாகியுள்ளன. இவற்றை எடுக்க தெளிவான கொள்கை முடிவு தேவை. நிர்வாக ரீதியான பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் முடிவு அறிவிக்கப்படும்” என்றார்.
இந்த கனிம வளம் தமிழக பொருளாதாரத்துக்கு பெரும் லாபத்தைத் தரவல்லது. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் மக்கள் நலன் கருதி அரசு கவனமாக முடிவெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் நியமனம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!