கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை அருகே உள்ள சோதனைச் சாவடியில், காட்டுமயிலூர் பகுதியைச் சேர்ந்த வல்லரசு என்பவரின் வாகனத்தைப் பரிசோதித்த போது, புதுச்சேரியிலிருந்து வாங்கிய 1 லிட்டர் 680 மில்லி லிட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி வல்லரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது வழக்கறிஞர், 2017ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் தமிழ்நாடு மது விதிகள் 1996ஐச் சுட்டிக்காட்டி, ஒரு தனிநபர் தனது சொந்தப் பயன்பாட்டிற்காக 4.5 லிட்டர் வரை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை வைத்திருக்க அனுமதி உள்ளது என்று வாதிட்டார். மனுதாரர் வைத்திருந்த மதுபான அளவு 1.68 லிட்டர் மட்டுமே என்பதால், அது அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருப்பதாகக் கூறினார்.

நீதிபதி எம். நிர்மல்குமார் இந்த மனுவை விசாரித்து, ஏப்ரல் 8 அன்று தீர்ப்பளித்தார். தமிழ்நாட்டின் விதிகளின்படி தனிநபர் சொந்தப் பயன்பாட்டுக்கு 4.5 லிட்டர் வைத்திருக்கலாம் என்றும், மனுதாரரிடம் இருந்த அளவு அதற்குக் கீழே இருப்பதால் குற்றம் எதுவும் இல்லை என்றும் கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு, சமூக ஊடகங்களில் “புதுச்சேரியிலிருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது” என்ற தவறான செய்தி வேகமாகப் பரவியது.
இதையும் படிங்க: டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!
இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மதுபானம் கொண்டு வர அனுமதியில்லை என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழக அரசின் பரிந்துரைகளை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4.5 லிட்டர் விலக்கு என்பது புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநில மதுபானங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4.5 லிட்டர் என்பது தமிழ்நாட்டில் உள்ள மதுபானங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்து விவரங்கள்..! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!