இன்று இரவு வானில் ஹண்டர்ஸ் மூன் எனப்படும் முழு நிலவு தோன்றவுள்ளது. வழக்கத்தை விட பிரகாசமாகவும் சற்று பிரம்மாண்டமாகவும் காட்சியளிக்கும் இந்த நிலவு பலரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இலையுதிர் காலத்தின் முதல் முழு நிலவுக்கு அடுத்ததாக வரும் முழு நிலவு ஹண்டர்ஸ் மூன் என அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு உணவைச் சேமித்து வைப்பதற்காக விலங்குகளை வேட்டையாட நிலவொளியைப் பயன்படுத்தியுள்ளனர். அறுவடை முடிந்த வெட்டவெளியில் விலங்குகள் நடமாடுவதை நிலவொளியில் எளிதாகக் கண்டுபிடிக்க முடிந்ததால் இந்த நிலவுக்கு ஹண்டர்ஸ் மூன் என்ற பெயர் உருவானது.
இந்த முழு நிலவு அடிவானத்தில் தோன்றும் போது அடர்ந்த ஆரஞ்சு அல்லது செந்நிறத்தில் காட்சியளிக்கும். வழக்கமாக பவுர்ணமிக்கு அடுத்தடுத்த நாட்களில் நிலவு தோன்றுவதில் தாமதம் ஏற்படும். ஆனால் இந்த வேட்டைக்காரன் நிலவு சூரியன் மறைந்த உடனேயே வானில் உதயமாகி இரவு முழுவதும் பிரகாசமான வெளிச்சத்தை வழங்கும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் உயிர் குடிக்கும் மழை சேதம்! 9 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 32 பேர் பலி! அச்சுறுத்தும் அர்னாப் புயல்!

நிலவு பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும்போது பூமிக்கு மிக அருகில் வரும் நிகழ்வுடன் இந்த பவுர்ணமி இணைவதால் இது வழக்கமான நிலவை விட பெரியதாகவும் அதிக ஒளி வீசியும் தென்படும். இதனால் இன்றைய முழு நிலவு வழக்கத்தை விட பிரகாசமாகவும் பிரம்மாண்டமாகவும் தோன்றும்.
மாலையில் சூரியன் மறைந்த சிறிது நேரத்தில் பிரம்மாண்டமான ஆரஞ்சு நிற நிலவை வெறும் கண்ணாலேயே ரசிக்கலாம். தொலைநோக்கி தேவையில்லை. திறந்த வெளிப்பகுதிகளில் இருந்து பார்ப்பது சிறந்தது. நகர விளக்குகளின் தாக்கம் குறைவான இடங்களில் நிலவின் நிறமும் அளவும் தெளிவாகத் தெரியும்.
வானியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று மாலை முதல் இரவு வரை இந்த அரிய காட்சியை ரசிக்கத் தயாராகி வருகின்றனர். ஹண்டர்ஸ் மூன் வழக்கமான முழு நிலவை விட சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதன் பிரகாசம் மற்றும் அளவு காரணமாக பல இடங்களில் மக்கள் வெளியே வந்து வானை நோக்கி நிற்கும் காட்சிகள் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி மாயம்.! திணறும் போலீஸ்... தொடரும் மர்மம்..! ஆலம்பூண்டியில் அதிமுக சார்பில் போராட்டம்..!