தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீட்டிற்காக பயன்படுத்தப்படும் மின் இணைப்புகளுக்கு 60 நாட்களுக்கு ஒரு முறை மின்சார கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணங்களை ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மின்வாரியத்தினர் பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டண தொகையை அவர்களது அலைபேசி எண்களுக்கு குறுந்தகவல் அனுப்புகின்றனர்.
அந்த வகையில் நெல்லை மாவட்டம் மருதகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், அவரது மனைவி சேபா என்பவரின் வீட்டு மின் இணைப்பிற்காக செப்டம்பர் மாதம் செலுத்த வேண்டிய கட்டணமாக ரூ.1.64 கோடி எனும் தொகை குறுந்தகவலில் வந்துள்ளது.
மாரியப்பன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக இறந்த நிலையில் சேபா, தனது 3 பெண் குழந்தைகளையும் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி தனது தந்தையான ஆசிர்வாதம் வயது 60, அரவணைப்பில் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: சீனா ராணுவத்தின் அசுர பலம்!! அணிவகுப்பில் மிரட்டல்!! வெற்றிப் பேரணியா? உலக நாடுகளுக்கு வார்னிங்கா?
இந்த நிலையில் திடீரென சேபாவின் அலைபேசி எண்ணிற்கு மின் கட்டணமாக ரூ.1,61,31,281 என்ற தொகையை செலுத்த வேண்டும் என குறுந்தகவல் வந்திருப்பதை பார்த்ததும் குடும்பமே அச்சத்தில் உறைந்தனர்.
இதையடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் ஆசிர்வாதம் தனது மகள் சேபாவோடு ஊரில் உள்ள பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மூலமாக மூலைக்கரைப்பட்டி உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மண்டல மேற்பார்வை மின் பொறியாளர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகவல் தெரிவித்த சில மணி நேரங்களிலேயே சேபா வீட்டிற்கு செலுத்த வேண்டிய முறையான கட்டணமான ரூ.494 என மாற்றி அமைக்கப்பட்டது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் மின்வாரிய ஊழியர்களின் கவனக்குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக மின்வாரிய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுபோல் எந்த சம்பவங்களும் நடைபெற கூடாது. மின்வாரிய ஊழியர்கள் கவனமாக செயல்பட வேண்டும். நாங்களே ஏழ்மையான குடும்ப நிலையில் இருக்கிறோம் என கண்ணீர் மல்க சேபாவின் தந்தை ஆசீர்வாதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமரின் தீபாவளி பரிசு! GST சீர்திருத்தத்தை புகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன்