தமிழகத்தில் நாளை (ஜனவரி 9) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 10) ஆகிய இரண்டு தினங்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம் 'ஆரஞ்சு' (Orange Alert) எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில், இந்த அதிரடி மழை அறிவிப்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பதிவாகக்கூடும் என்பதால், தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்குக் கனமழைக்கான வாய்ப்பு நிலவுகிறது. இதில் ஜனவரி 8 மற்றும் ஜனவரி 11 ஆகிய இரண்டு தினங்களுக்கு 7 செ.மீ முதல் 11 செ.மீ வரை மழை பெய்யக்கூடும் என்பதால், இந்த நாட்களுக்கு 'மஞ்சள்' (Yellow Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மழையின் தீவிரம் அதிகரித்து, 20 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூட்டணிக்கு நடுவில் கூடலூருக்கு வருகை தரும் ராகுல்! மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம்!
தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் 3,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கும் பணி ரேஷன் கடைகளில் தொடங்கியுள்ள நிலையில், மழை குறுக்கிட வாய்ப்புள்ளதால் பயனாளிகள் நனையாமல் பொருட்களைப் பெற்றுச் செல்ல உரிய ஏற்பாடுகளைச் செய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்லும் போது வானிலை முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "நோ ஒர்க் - நோ பே!" போராடும் ஆசிரியர்களுக்குத் தமிழக அரசு கடும் எச்சரிக்கை!