சம வேலைக்குச் சம ஊதியம் கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மீது "பணிக்கு வராவிடில் ஊதியம் கிடையாது" என்ற விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) சார்பில் தங்களது ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகும் ஆசிரியர்கள் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடுவதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகத் தொடக்கக் கல்வி இயக்குநர் கவலை தெரிவித்துள்ளார். இதனால், அனுமதியின்றிப் போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு அந்த நாட்களுக்கான ஊதியத்தை வழங்கக் கூடாது என்றும், அந்த நாட்களை ஊதியமில்லா விடுப்பாகக் கருத வேண்டும் என்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிரடி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அவசரச் செயல்முறைகளின்படி, கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல் பள்ளிக்கு வருகை புரியாமல் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை இன்று மாலை 5 மணிக்குள் எக்செல் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவக் காரணங்களால் விடுப்பில் இருப்பவர்களைத் தவிர, போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வேறு எந்த விடுப்பையும் அனுமதிக்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3-ஆம் பருவ பாடப்புத்தகங்கள் மற்றும் நலத்திட்டங்களை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் விளக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொந்தளிப்பில் இடைநிலை ஆசிரியர்கள்..!! சென்னையில் 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!
சென்னையில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் SSTA அமைப்பினர் 12-வது நாளாகத் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் நீடிக்கிறது. 2009 ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் பெரும் முரண்பாடு நிலவுவதாகவும், இதனைத் திமுக தனது தேர்தல் வாக்குறுதியின்படி சரிசெய்ய வேண்டும் என்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், மறுபுறம் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது 'No Work - No Pay' விதியை அமல்படுத்த இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது ஆசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "இனி இஷ்டத்துக்கு கூட்டம் போட முடியாது!" பொதுக் கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடு.. தமிழக அரசு அதிரடி!