அணுசக்திப் பயன்பாடு மற்றும் ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா தாக்குதலைத் தொடங்கியது. எனினும், தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதிலும், அவ்வப்போது அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதற்கிடையே, பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய அமைதி ஒப்பந்தம் அமெரிக்காவின் பரிசீலனைக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி நேற்று வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏதேனும் தவறான முடிவுகளை எடுத்தால், ஈரான் ஆயுதப் படைகள் முன்பைவிடக் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று ஈரான் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு?! ஈரானுக்கு எதிராக களமிறங்கிய 60 நாடுகள்!
ஈரானின் தேசியப் பாதுகாப்புக் கவுன்சில் செயலாளர் மொஹ்சன் ரெசாயி தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் ஆயுதப் படைகள் முன்பைவிடப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய புதிய திட்டத்தைத் தயாராக வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் சமீபத்திய அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஈரானின் புதிய போர்த் திட்டம் அவர்கள் இதுவரை அறிந்திராத வகையில் கடுமையானதாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, ‘அனைத்து குண்டுகளின் தாய்’ என்று அழைக்கப்படும் அணு ஆயுதம் அல்லாத ராட்சத வெடிகுண்டை, ஈரானின் அணுசக்தி மற்றும் எரிசக்தித் தளங்களைக் குறிவைத்துப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாகக் கடந்த வியாழக்கிழமை செய்திகள் வெளியாகின.
இந்தக் குண்டை எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானின் புரட்சிகர ஆயுதப் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் அந்நாட்டின் புதிய பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மெஹர்தாத் அக்லகி கெட்டாப்சி தனது முதல் உரையிலேயே தெரிவித்திருந்தார்.
மேலும், ட்ரம்ப் தனது படைகளை வளைகுடா பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும், மீண்டும் குண்டுவீச்சு நடத்த நினைத்தால் ஏராளமான அமெரிக்க வீரர்கள் சடலங்களாகத்தான் திரும்புவார்கள் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினரும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளதால், மத்திய கிழக்குப் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!