மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில் ரூ.36 கோடி பாக்கியை வசூலிக்க வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக, அவரது சட்ட வாரிசு ஜெ. தீபா தாக்கல் செய்த இடைக்கால தடை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பு, ஜெயலலிதாவின் சொத்து மற்றும் நிதி விவகாரங்களில் புதிய சர்ச்சையைத் தூண்டியுள்ளது.

ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் மரணமடைந்த பின்னர், அவரது சொத்துகளைப் பற்றிய சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த வழக்கு 1991-92 மற்றும் 1992-93 ஆகிய ஆண்டுகளில் ஜெயலலிதா வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தவறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இந்த வழக்கு 1990-91 முதல் 2011-12 வரையிலான செல்வ வரி பாக்கியாக ரூ.10.12 கோடியும், 2005-06 முதல் 2011-12 வரையிலான வருமான வரி பாக்கியாக ரூ.6.63 கோடியும் உள்ளடங்கியது, மொத்தமாக ரூ.36 கோடி வரை பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வருமான வரி பாக்கி: ஜெ.-வின் வாரிசுக்கு பறந்த நோட்டீஸ்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!
கடந்த 2020 ஆம் ஆண்டு மே 27ம் தேதி அன்று, சென்னை உயர்நீதிமன்றம் ஜெ.தீபா மற்றும் அவரது சகோதரர் ஜெ.தீபக்கை ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்தது. இதையடுத்து, வருமான வரித்துறை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பரில் தீபா மற்றும் தீபக்கை வழக்கில் இணைக்க உத்தரவு பெற்றது. இதனையடுத்து வரித்துறையின் ரூ.36 கோடி பாக்கி கோரிக்கை நோட்டீஸுக்கு எதிராக தீபா நீதிமன்றத்தை அணுகினார்.
அந்த நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து, செப்டம்பர் 2ம் தேதிக்குள் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு ஜெயலலிதாவின் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள், குறிப்பாக சென்னையில் உள்ள ‘வேதா இல்லம்’ மற்றும் ஹைதராபாத் சொத்துக்கள் மீதான இணைப்பு உத்தரவுகளை உள்ளடக்கியது. தீபா மற்றும் தீபக், இந்த சொத்துக்களை மீட்கவும், அவற்றை நிர்வகிக்கவும் உரிமை கோரி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று இறுதிக்கட்ட விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா பாக்கி வைத்துள்ள ரூ.36 கோடியை கேட்டு தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தற்போது, அந்த நோட்டீஸ் திரும்ப பெறப்பட்டு விட்டது. அந்த தொகையை ரூ.13 கோடியாக குறைத்து, திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீஸ் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது என்று வருமான வரித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘ரூ.36 கோடி செலுத்தும்படி வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை திரும்ப பெற்று விட்டதால், அதை எதிர்த்து தொடர்ப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். ரூ.13 கோடி கேட்டு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தீபா சட்டப்படியாக நிவாரணத்தை கோர உரிமை உள்ளது என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, ஜெயலலிதாவின் பாரம்பரியத்தைச் சுற்றியுள்ள சட்டப் போராட்டங்களை மீண்டும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தீபாவின் அடுத்த நடவடிக்கை என்ன என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க: #BREAKING: எனக்கு HAPPY தான்! கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் பரபரப்பு கருத்து