தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர். இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இடம் பெற்றார். மேலும், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இவர்கள் பத்துப் பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்தது. மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையும் படிங்க: "சொன்னா கேளுங்க வேணாம்"..! கடலூரில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்..! மீன்பிடி தொழிலுக்கே பேராபத்து..! எச்சரித்த சீமான்..!

இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு மார்ச் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அனைவருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து, மொத்தம் 1 கோடியே 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அபராதத்தை வழங்கிடக்கோரி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக ஜூன்.04 ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர், தாமஸ் தவிர மற்றவர்கள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை இதே அமர்வு விசாரிக்கட்டுமா? அல்லது வர உள்ள அமர்வு விசாரிக்கட்டுமா? என்பது தொடர்பாக வழக்கறிஞர்கள் தரப்பில் முடிவெடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கை ஜூன்.15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் தவிர மற்றவர்கள் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர். ஸ்ரீதர் தரப்பில் காணொலி காட்சி வாயிலாக ஆஜராகி, மேல்முறையீடு ஆவணங்கள் தயாராக உள்ளது. இன்று தாக்கல் செய்ய உள்ளோம் என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதிகள் விசாரணையில், மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்வதற்கு, ஜீன்.17 ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி கொடூரம்: ‘கூட்டு பாலியல் வன்கொடுமையா’..? போலீஸ் புது அப்டேட்..!!