கடந்த மாதம் 25-ம் தேதி நள்ளிரவில், படப்பையை அடுத்த சோமங்கலம் சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த கொள்ளைக் கும்பல், கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து, அதிலிருந்த சுமார் 9 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, முகமூடி அணிந்த ஒருவர் கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இதே கொள்ளைக் கும்பல் அடுத்தடுத்து மேலும் மூன்று சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: #BREAKING கஜானாவில் காசில்லை... திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அதிரடி ரத்து... தவெக அரசு தடாலடி முடிவு...!
குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தையும் உடைத்து, அதிலிருந்து சுமார் 12 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மற்றொரு ஏடிஎம் மையத்தையும் குறிவைத்தபோது, ஆள் நடமாட்டத்தை உணர்ந்த கொள்ளைக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மூன்று கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியபோது, இந்த கொள்ளைக் கும்பல் லாரி மூலம் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று அந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, ஹரியானா, சத்தீஸ்கர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஹரியானாவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றபோது, பவன் குமார் என்பவர் ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
வைசாலி நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக ஜெய்ப்பூர் போலீசாரால் பவன் குமார் கைது செய்யப்பட்டிருந்தார். இதையடுத்து, சோமங்கலம் தனிப்படை போலீசார் அவரை இந்த வழக்கில் தற்போது முறையாகக் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளை வழக்கில் மொத்தம் 5 பேர் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களில் 4 பேருடன் சேர்ந்து பவன் குமாரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பவன் குமாரை முறையாகக் கைது செய்துள்ள போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், தலைமறைவாக உள்ள மற்ற நான்கு பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தக் கொள்ளைக் கும்பல் மீது பல்வேறு மாநிலங்களில் இதே பாணியில் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே பாணியில், கேஸ் கட்டரைப் பயன்படுத்தி, முகமூடி அணிந்து ஏடிஎம் மையங்களுக்குள் சென்று இயந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பது இவர்களின் வழக்கமாக இருந்துள்ளது. கொள்ளை சம்பவங்களுக்குப் பயன்படுத்திய வாகனங்களையும் அடிக்கடி மாற்றி வந்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேபோல், பல்வேறு மாநில போலீசாரும் இந்தக் கும்பலைத் தேடி வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நான்கு பேரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும், இவர்கள் மூன்று ஏடிஎம் மையங்களில் மட்டுமே கைவரிசை காட்டியுள்ளார்களா அல்லது வேறு ஏதேனும் ஏடிஎம் மையங்களில் இதேபோன்று கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்களா என்பது, கைது செய்யப்பட்ட பவன் குமாரிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகே தெரியவரும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் பயங்கரம்... எமனாக மாறிய கிரிக்கெட் பந்து... 11 வயது சிறுவன் துடிதுடித்து பலி...!