பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்கள் உள்ளிட்டோரை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வீடியோ எடுத்து மிரட்டி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இதுக்குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்தார் அதன்பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்தது. இதன்பின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சுமார் 6 ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில், இன்று கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில், குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருந்த 9 குற்றவாளிகளான திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், மணிவண்ணன், ஹேரன் பால், பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் மற்றும் வசந்தகுமார் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு அளித்தார். அதேபோல் பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு அளிக்கவும் உத்தரவிட்டார். இதில் அதிகபட்சமாக திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் வாழ்நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பு பல்வேறு தரப்பினராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது அப்போதைய அதிமுக அரசுதான் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.
இதையும் படிங்க: கூச்சமே இல்லைல..! பொள்ளாச்சி வழக்கில் திமுகவுக்கு என்ன பங்கு? மு.க.ஸ்டாலினை உரித்தெடுத்த இபிஎஸ்..!

இதுகுறித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பொள்ளாச்சி வழக்கில் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. ஏனென்றால் பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பாற்றும் அத்தனை முயற்சிகளிலும் அதிமுக ஈடுபட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் பக்கம் அதிமுக நிற்கவில்லை. அதிமுகவில் பொறுப்பில் இருந்தவர்கள் சிலர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு நெருக்கமாகவும் இருந்தனர். அதனால் அவர்கள் மீது வழக்கு கூட பதிவு செய்ய அதிமுக தயாராக இல்லை.

அப்படியான சூழலில் யாருக்கும் அதிமுக ஆட்சி மீதோ, எடப்பாடி பழனிசாமி மீதோ நம்பிக்கை இல்லாத காரணத்தால், அவர்கள் சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். அதிமுக ஒன்றும் தாமாக சிபிஐ விசாரணைக்கு வழக்கை மாற்றவில்லை. அதிமுக ஆட்சியில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால், சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய தேவையே வந்திருக்காது. அதனால் சிபிஐ-க்கு விசாரணையை மாற்றியது தனக்கு பெருமை என்று எடப்பாடி பழனிசாமி நினைத்தால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பொள்ளாட்சி வழக்கு; பெண்கள் வணங்கி போற்றத்தக்கவர்கள்... பாராட்டி தள்ளிய கமல்ஹாசன்!!