கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள காவுவிளை பகுதியைச் சோ்ந்த துரைசாமி-தனலெட்சுமி தம்பதியின் மகன் தனுஷ். இவர் தான் காதலித்த பெண்ணின் வீட்டின் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பெண் கேட்டு சென்றபோது மறுத்ததால் தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது மரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், தனுஷ் மரணம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!

அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளதாகவும், நல்லமுறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ் தான் காதலிக்கும் பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை என்றும் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது என்று கூறினார். இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு.

அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் திமுக-விற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழகக் காவல்துறை இணங்கக் கூடாது. ஆளுங்கட்சியின் வாக்கரசியலுக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படக்கூடாது. ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் உள்ள நிலையில், ஆளும் திமுகவின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துவதாகவும், மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் தமிழ்நாடு பாஜக உறுதியாக நிற்கும் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவோடு சேருவதில் பிரச்னை இல்லை; ஆனால்... பகீர் கிளப்பிய திருமாவளவன்!!