தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் பலியானது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 50 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. இதனால் ஏற்பட்ட அச்சத்தால் மக்கள் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கரூரின் நிகழ்ந்த துயரச் சம்பவம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவர் அலைபேசியின் வாயிலாக நேரலையில் பேசினார். கரூரில் நிகழ்ந்த துயரத்தை அவர் விளக்கி பேசியபோது உடைந்து அழுதார். எத்தனையோ தாய்மார்கள் கால்களை பிடித்துக்கொண்டு காப்பாற்றுமாறு கதறியதாகவும் குழந்தைகள் தங்களை காப்பாற்றுமாறு துடித்ததாகவும் கூறி மனம் உடைந்து அழுதார்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் துயரச்சம்பவம்... எங்க மேல தப்பு இல்ல... தவெக வழக்கறிஞர்கள் பரபரப்பு பேட்டி…!
தான் தூக்கிக் கொடுத்த குழந்தை தற்போது உயிரோடு இருக்கிறதா என்று கூட தெரியவில்லை என்றும் கண் முன்னே நூற்றுக்கும் மேற்பட்டோர் சரிந்ததாகவும் தெரிவித்தார். எப்படிப்பட்டவரையும் கலங்கடித்து விடும் இந்த கரூர் சம்பவம் என்றும் கூறியிருந்தார். களத்தில் இருந்து நடந்த சம்பவத்தை கண்கூடாக பார்த்துவிட்டு செய்தியாளர் கதறி அழுதது கரூரின் உண்மை நிலையை நமக்கு புரிய வைக்கும் வகையில் இருக்கிறது.
இதையும் படிங்க: #BREAKING: சோகத்தில் மூழ்கிய கரூர்... உதவி எண்கள் அறிவிப்பு..!!