டாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மாணவர் போராட்டம் கலவரமாக மாறி, பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த பிறகு, இந்துக்களின் வீடுகள், கோயில்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. இந்திய அரசின் தலையீட்டால் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இந்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால், கடந்த மாதம் மாணவர் போராட்டத்தை தலைமை தாங்கிய ஒஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் போராட்டங்கள் வெடித்தன. இதனால் இந்துக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. கடந்த இரு வாரங்களில் மட்டும் நான்கு இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மைமன்சிங் மாவட்டத்தில் ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்த தீபு சந்திர தாஸ் என்ற இளைஞரை போராட்டக்காரர்கள் அடித்துக்கொன்று உடலை எரித்தனர். பின்னர் ராஜ்பாரி மாவட்டத்தில் அம்ரித் மண்டல் என்ற இளைஞரை கிராம மக்கள் ஒன்றுகூடி அடித்துக்கொன்றனர். மூன்று நாட்களுக்கு முன் மைமன்சிங் மாவட்டத்தில் ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்த பிஜேந்திர பிஸ்வாஸ் என்ற இந்து தொழிலாளியை சக தொழிலாளி சுட்டுக்கொன்றார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்!! வங்கதேச அரசுக்கு இந்தியா சம்மட்டி அடி!
இந்நிலையில், ஷரியத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகன் சந்திர தாஸ் (வயது 50) என்ற இந்து மீது மர்ம கும்பல் கொலை முயற்சி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூர்பங்கா பஜார் பகுதியில் மருந்துக் கடை நடத்தி வந்த கோகன் தாஸ், மணி டிரான்ஸ்பர் தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
வழியில் மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியது. உயிர் தப்பிக்க கோகன் தாஸ் ஆட்டோவில் இருந்து கீழே குதித்து ஓடினார். ஆனால், ஆசாமிகள் அவரை விரட்டிச் சென்று கொடூரமாக தாக்கினர். கத்தியால் குத்திய பிறகு, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தீயில் சிக்கிய கோகன் தாஸ் அருகில் உள்ள குளத்தில் குதித்து உயிரை காப்பாற்றிக்கொண்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் ஆசாமிகள் தப்பி ஓடினர். முகத்தில் தீக்காயமும் வயிற்றில் ஆழமான கத்திக்குத்து காயமும் அடைந்த கோகன் தாஸை மக்கள் மீட்டு ஷரியத்பூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை மோசமானதால் டாக்கா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.
கோகன் தாஸின் மனைவி சீமா தாஸ் மருத்துவமனையில் கண்ணீர் மல்க கதறியபடி கூறுகையில், “நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை. பல ஆண்டுகளாக வங்கதேசத்தில் வசித்து வருகிறோம். என் கணவர் எப்போதும் கடையை மூடிவிட்டு பணத்துடன் ஆட்டோவில் வீட்டுக்கு வருவார். திடீரென இந்துக்கள் மீது ஏன் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று புரியவில்லை” என்றார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தாக்குதலில் ஈடுபட்ட ரப்பி, ஷாஹக் என்ற இருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரு வாரங்களில் நான்கு இந்துக்கள் மீது நடந்த கொடூர தாக்குதல்கள் வங்கதேச இந்துக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியாவிலும் வங்கதேசத்திலும் உள்ள தலைவர்களும் இந்து அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்து இளைஞர் கொலை! வருத்தம் தெரிவிச்சா போதுமா? ஆக்சன் வேணும்! வங்கதேச அரசுக்கு சசி தரூர் அறிவுறுத்தல்!