கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா என்றும் தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண நிகழ்வு குறித்த விசாரணையில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா எனவும் கேட்டுள்ளார்.
தமிழ் அதிகாரிகளுக்கு நடந்த இந்த அவமதிப்பிற்கு, தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இந்த தலைகுனிவிற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது என்றும் சுயமரியாதை, மாநில சுயாட்சி என பெரும் பேச்சுக்கள் பேசியவர்கள் இப்பொழுது வாய் மூடி இருப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: யாரையும் பலிகடா ஆக்குற அவசியம் எங்களுக்கு இல்ல... பொறுப்பா இருங்க - முதல்வர் ஸ்டாலின்...!

தமிழர் மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத அதிகாரிகள் விசாரணை செய்வது எப்படிச் சரியானதாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய சீமான், அது விசாரணையில் தேவையற்ற தாமதத்தையும், தடங்கலையும் ஏற்படுத்தாதா என்றும் மணிப்பூர் கலவரத்திற்கான விசாரணையில் இதுபோன்ற உத்தரவை அம்மாநில மக்கள் ஏற்பார்களா அல்லது கும்பமேளா நெரிசல் மரணம் குறித்து விசாரணை செய்ய இந்தி தெரியாத அதிகாரியை நியமித்தால் அம்மாநில மக்கள்தான் ஏற்பார்களா என்று சாடினார்.
ஏற்கனவே, ஒரிசா மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த குடிமைப்பணி அதிகாரி கார்த்திகேயபாண்டியனை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அம்மாநில பாஜக அவதூறு பரப்பி அவமதித்தது என்று கூறிய சீமான், கரூர் உயிரிழப்பு விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உடனடியாக மனுதாக்கல் செய்ய வேண்டுமா., வேண்டாமா என்பதை அவரவர் மனச்சான்றுக்கே விட்டுவிடுகிறேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கைகளில் கருப்பு பட்டை... திமுக அரசுக்கு எதிர்ப்பு! சட்டப்பேரவைக்குள் ENTRY கொடுத்த அதிமுக உறுப்பினர்கள்...!