"நரிக்கு ஆடு மேய்க்கத் தெரிந்தாலும் அது தன் இயல்பைக் காட்டாமல் இருக்காது" என்பார்கள். வேலூர் மாவட்டம் காட்பாடியில் தான் உண்டு தன் வேலையுண்டு என நம்பிப் பொறுப்பைக் கொடுத்த முதலாளியின் வீட்டிலேயே கோடிக் கணக்கில் ஆட்டையைப் போட்ட ஊழியர்களின் பகீர் சம்பவம் வேலூர் மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர வைத்துள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் 2-வது புதிய தெருவில் வசித்து வருபவர் பிரபல தொழிலதிபரும், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் உறுப்பினருமான சேகர் ரெட்டி. சமீபத்தில் இவரது மகளுக்குக் கடந்த வாரம் சென்னையில் கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.
இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட வீட்டில் பணிபுரிந்த ராணி என்பவரும் அவரது மகள் மகாலட்சுமியும் "இதுதான் சரியான நேரம்" எனத் திட்டம் போட்டனர். முதலாளி குடும்பத்தினர் திருமணப் பணிகளில் மூழ்கியிருந்த அந்தச் சமயத்தில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக 5 கிலோ தங்க நகைகளையும் ரூபாய் 65 லட்சம் ரொக்கப் பணத்தையும் சுருட்டிக் கொண்டு நைஸாக நழுவினர்.
இதையும் படிங்க: ATM-ஐயே தூக்கி சென்ற கொள்ளையர்கள்..! திருவள்ளூரில் பரபரப்பு... தீவிர விசாரணை..!
திருமணம் முடிந்து வந்து பார்த்தபோதுதான் அந்த பேரதிர்ச்சி காத்திருந்தது சிறுகச் சிறுகச் சேமித்த நகைகளும் பணமும் மாயமாகியிருப்பதை உணர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியின் அலுவலக மேலாளர் சந்திரசேகரன், உடனடியாக விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
விஷயம் சீரியஸ் என்பதை உணர்ந்த காட்பாடி டிஎஸ்பி விஜயகுமார் தலைமையில், விருதம்பட்டு காவல் ஆய்வாளர் சாபுதீன் மற்றும் உதவி ஆய்வாளர் அண்ணாமலை அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை முடுக்கடப்பட்டது
காவல்துறையின் சந்தேகப் பார்வை வீட்டின் வேலைக்காரர்களான ராணி மற்றும் மகாலட்சுமி மீது திரும்பியது அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்து மழுப்பினர். ஆனால் காவல்துறையின் 'பாணி' விசாரணையில் உண்மை ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியது!
மகாலட்சுமியின் ஊரான ஊசூர் அடுத்த அந்தியூர் கலங்கமேடு பகுதியைச் சேர்ந்த உறவினர்களான கார்த்திக், முரளி, சந்தோஷ் குமார் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் பார்த்தீபன் இவர் விடுப்பில் வந்த போது இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் விடுப்பு முடிந்து பணிக்கு சென்றுவிட்டதால் இவருக்கு காவல் துறை ஓலை அனுப்பி உள்ளது. ஆகியோரைத் துணைக்குச் சேர்த்துக்கொண்டு இந்த பிரம்மாண்ட கொள்ளையை அரங்கேற்றியது அம்பலமானது.
கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு இவர்கள் அடித்த கூத்துதான் காவல்துறையினருக்கு அணுவளவும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகைகளை விற்று பல கோடி மதிப்புள்ள 4 காலி மனைகள் வாங்கியுள்ளனர் கெத்தாக வலம் வர 3 சொகுசு கார்கள் மற்றும் 1 டிராக்டர் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.
சதித்திட்டம் தீட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ராணி, மகாலட்சுமி, கார்த்திக், முரளி, மற்றும் சந்தோஷ் குமார் ஆகிய 5 பேரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3.5 கிலோ தங்க நகைகள் ₹47.5 லட்சம் ரொக்கப் பணம் திருட்டுப் பணத்தில் வாங்கப்பட்ட 3 சொகுசு கார்கள், 1 டிராக்டர் மற்றும் 4 காலி மனைகளின் பத்திரங்கள் ஆகியவை அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நபரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்
"பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேர்" என்பார்கள். உண்டு கொழுத்த வீட்டிற்கே துரோகம் இழைத்து, குறுக்கு வழியில் கோடீஸ்வரர்களாக மாற ஆசைப்பட்ட இந்தக் கும்பல், இறுதியில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது. வேலூரையே பரபரப்பில் ஆழ்த்திய இந்தச் சம்பவம், வீடுகளில் பணிபுரியும் ஆட்களை நியமிக்கும்போது எவ்வளவு விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எச்சரிக்கை மணி
இதையும் படிங்க: தம்பதியைக் கட்டிப்போட்டு கைவரிசை... 40 சவரன் நகைகள், 40 லட்சம் ரூபாய் கொள்ளை...!