கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்தில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வணிக கட்டிடங்களை அகற்றக் கோரிய வழக்கு. சரணாலய பகுதியில் உள்ள தனியார் தனியார் விடுதிகளில் எவ்விதமான கேம்பயர் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
கொடைக்கானலைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், செல்வகணபதி உள்ளிட்ட 5 பேர் மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், "ஆனைமலை புலிகள் காப்பக இடையக பகுதி விரிவுப்படுத்தப்பட்டு கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் வனப்பிரிவுகளின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டன. இந்த எல்லை பூண்டி கிராமத்தில் தொடங்கி மன்னவனூர், கூக்கால் ஆகிய கிராமங்கள் வழியாக ஆண்டிப்பட்டி வரை செல்கிறது. தேசிய வனவிலங்கு வாரியத்தில் முன் அனுமதி இல்லாமல் இந்த பகுதியில் விடுதிகள், ஹோட்டல்கள், பூங்காக்கள் போன்றவை கட்டப்படக்கூடாது. ஆனால் கொடைக்கானலில் முறையான அனுமதி இல்லாமல் அங்கீகாரம் அற்ற வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
எனவே மன்னவனூர் கிராம ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இடையகப் பகுதியில் எவ்வித வணிக கட்டிடங்களுக்கும் அனுமதி வழங்க தடை விதிப்பதோடு, மன்னவனூர் கிராமத்தில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வணிக கட்டிடங்களை அகற்றவும்,அதன் இயல்பான நிலைக்கு மீட்டெடுக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: 31ஆம் தேதி வரை ஃப்ரீ என்ட்ரி..! கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்..!!
இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், " "இந்த பகுதியில், வணிக ரீதியான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் "கேம்ப்பயர்" அமைக்கப்பட்டு இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த கட்டுமானங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டப்பட்டுள்ளன" என தெரிவிக்கப்பட்டது.
இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், " வழக்கு தொடர்பாக தமிழக வனத்துறை முதன்மைச் செயலர், ஆனைமலை புலிகள் காப்பக தலைமை வன பாதுகாவலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும், " தனியார் விடுதிகளில் எவ்விதமான கேம்பயர் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு, வழக்கை வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கோயில் கும்பாபிஷேகத்தில் ஒலிபெருக்கிகள்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!