லண்டனுக்கு வடக்கே உள்ள பெட்போர்ட் நகருக்கு அருகில் பெரும் ரயில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இரண்டு ஈஸ்ட் ரயில்கள் நேருக்கு நேர் வேகமாக மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் இரு ரயில்களும் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன. விபத்து ஏற்பட்ட உடனேயே பயணிகள் முன்னோக்கி வீசப்பட்டதால் பலருக்கு எலும்பு முறிவு மற்றும் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ரயில் டிரைவர் உயிரிழந்தார். 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 22 பேர் பலத்த காயங்களுடனும், 56 பேர் சிறு காயங்களுடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில பயணிகள் இன்னும் ரயிலுக்குள் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அச்சுறுத்தும் ஷிகெல்லா தொற்று! அதிகரிக்கும் வேகம்! கேரளாவில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

பிரிட்டன் போக்குவரத்து அமைச்சர் ஹைடி அலெக்சாண்டர், இந்த விபத்து குறித்து மிகுந்த கவலை தெரிவித்துள்ளார். “நிலவரத்தை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய உதவிகள் செய்யப்படும்” என அவர் தெரிவித்தார். பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர், விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இந்த விபத்து ஏன் ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து பாதுகாப்பு வல்லுநர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சிக்னல் பிழை அல்லது மனிதத் தவறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விபத்து பிரிட்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி மற்றும் உளவியல் ஆதரவு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், விபத்துக்கான உண்மையான காரணம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லிப்டில் சில்மிஷம் செய்த மருத்துவமனை ஊழியர்! அதிரடி காட்டியது சிங்கப்பெண் அதிரடிப்படை!