தமிழகச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–2027-ஆம் நிதியாண்டிற்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகிய இரண்டுமே மாணவர்கள், மகளிர், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பேரதிர்ச்சியை அளித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொது பட்ஜெட்டிலும் சரி, வேளாண் பட்ஜெட்டிலும் சரி மக்கள் எதிர்பார்த்த பயனுள்ள அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. காலிப் பாத்திரம் ரொம்ப சத்தம் போடும் என்பார்கள், அதற்கு மிகச் சிறந்த உதாரணமாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது" என்று எள்ளல் நகைச்சுவையுடன் விமர்சித்தார்.

இந்த பட்ஜெட்டினால் எந்தவொரு நன்மையும் இல்லை என்று குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், குறிப்பாக 'Gen-Z' இளைஞர்களுக்கு எவ்வித பயனுள்ள அறிவிப்புகளும் இல்லை எனத் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியில் தவெக குறிப்பிட்டிருந்தபடி மாணவர்களுக்கும் மகளிர்க்கும் நிதி உதவி வழங்கும் திட்டங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்படவில்லை. பழைய திட்டங்களுக்கே மீண்டும் ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்திருப்பது பட்டதாரிகளையும் பெண்களையும் ஏமாற்றும் செயல் எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: Blast Blast என எதிர்பார்த்த மக்களுக்கு Waste Waste! பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
மேலும், ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியும் பொய்த்துப் போய்விட்டதாக அவர் சாடினார்.
வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயத்தை நம்பியிருப்பவர்களுக்கான நிதியில் ரூ.200 கோடியைக் குறைத்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது எனக் கண்டித்த அவர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு 4% வட்டியில் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து பட்ஜெட்டில் எந்தப் பேச்சும் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தேர்தலின் போது 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள், அதில் வெறும் 18 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். அதற்கான நிதி ஒதுக்கீடும் பட்ஜெட்டில் சரியாகச் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்தார்.
பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள், முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் எதுவும் இதில் இல்லை என்று சாடிய நயினார் நாகேந்திரன், மீனவர்களுக்குத் தருவதாகக் கூறிய ரூ.20,000 நிவாரணத்திற்குப் பதிலாக வெறும் ரூ.7,000 மட்டுமே அறிவித்து ஏமாற்றியிருப்பதாகக் கூறினார். புதிய வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டுவது தொடர்பாகவும் எவ்விதத் தெளிவான முடிவும் இல்லை என்றும், இவ்வளவு மோசமான ஒரு பட்ஜெட்டைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை என்றும் ஆவேசப்பட்டார்.
பள்ளிக்கல்வித் துறைக்கான நிதியும், இலவச மின்சாரத்திற்கான நிதியும் குறைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரிப் பிரச்சினை தலைதூக்குவது வழக்கமாகிவிட்டது எனக் குறிப்பிட்டார். மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உடனடியாக கேரளா முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சி.எம். விஜயின் மாஸ்டர் பிளான்... பட்ஜெட்டில் பக்கா மாஸ் அறிவிப்பு... முக்கிய துறைக்கு டபுளாக நிதி ஒதுக்கீடு...!!