தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் அடுத்தடுத்து புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
தற்போது மீண்டும் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் இரண்டு காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதனால், இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (23-11-2025) மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவி வருகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணி நேரத்தில் வலுபெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணி நேரத்தில், தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: அலற விடும் ஆரஞ்சு அலர்ட்… லிஸ்ட்- ல சென்னையும் இருக்காம்..! வெளுக்க போகுது மழை…!
அதே போல் நேற்று முன்தினம் (23-11-2025) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்றும் (24-11-2025) அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று, குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... வங்கக்கடலில் அதிரடி மாற்றம்...அடுத்த 24 மணி நேரத்தில் வருகிறது அடுத்த ஆபத்து...!