தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய சேவல் சண்டைகளுக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதித்துச் சுற்றறிக்கை பிறப்பிக்கக் காவல்துறை தலைமை இயக்குநருக்கு (DGP) என்ன சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக டிஜிபி மற்றும் மத்திய அரசு விரிவான பதிலளிக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கிராமக் கோவில் திருவிழாக்களின் போது பாரம்பரிய முறைப்படி சேவல் சண்டை நடத்துவதற்கு உரிய அனுமதி வழங்கக் கோரி, ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சேவல் சண்டைகளுக்குத் தடை விதித்துத் தன்னிச்சையாகப் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று தீவிர விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிருக வதை தடுப்புச் சட்டம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவை ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே மாநிலம் முழுவதும் சேவல் சண்டைக்குத் தடை விதித்து டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார் என்று வாதிட்டார்.
இதையும் படிங்க: கருணை அடிப்படையில் பணி நியமனம்... மத்திய மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு..! ஹைகோர்ட் திட்டவட்டம்..!!
அரசுத் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி வி.லட்சுமி நாராயணன் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். காவல்துறைக்கு சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது உள்பட எத்தனையோ முக்கியப் பணிகள் இருக்கும்போது, எங்கு ஆடு சண்டை நடக்கிறது, எங்கு சேவல் சண்டை நடக்கிறது என்பதைக் கண்காணிப்பதுதான் உங்கள் வேலையா? மாநிலம் முழுவதும் சேவல் சண்டைக்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதித்து சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த மனு தொடர்பாகத் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி மற்றும் மத்திய அரசு தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலில் பாக்கெட் பாலுக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!