தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் சரணடைந்த நான்கு கைதிகளின் உடல்நிலையை ஆய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நான்கு பேரும் சிறைக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாக அவர்களது தாய் ஆறுமுகத்தம்மாள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கவும், உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை நவம்பர் ஆறாம் தேதிக்குள் காவல் துறை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையில் இருந்து கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி இரவு 17 விசாரணைக் கைதிகள் தப்பிச் சென்றனர். ஒரு கைதிக்கு வலிப்பு வந்தது போல் நடித்து சிறைக் காவலர்களை உள்ளே அழைத்து தாக்கிவிட்டு அவர்கள் வெளியேறினர். இந்தச் சம்பவத்தால் சிறைக் காவலர்கள் சிலர் காயமடைந்தனர். பின்னர் தீவிர தேடுதல் வேட்டையில் பிடிபட்டனர்.

அவர்களில் மீனாட்சி சுந்தரம் மற்றும் திருப்பதி உள்ளிட்ட நான்கு பேர் சரணடைந்த பின்னர் சிறைக் காவலர்களால் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது.இந்த நான்கு பேரின் தாய் ஆறுமுகத்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனது மகன்கள் இருவரையும் உடன் இருந்த மற்ற இருவரையும் சிறைக் காவலர்கள் தாக்கி காயப்படுத்தியதாகவும், அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். காயங்கள் இருந்தபோதிலும் அவர்கள் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கு உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நீதிமன்ற உத்தரவை மாற்ற முயன்றால் கடும் விளைவு: அமைச்சர்களுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை!
சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சரணடைந்த நான்கு கைதிகளின் உடல்நிலையை முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிட்டது. தேவைப்பட்டால் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் ஆணையிடப்பட்டது. இந்த உத்தரவை எவ்வாறு அமல்படுத்தியது என்பது தொடர்பாக காவல் துறை நவம்பர் ஆறாம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் நேரு மறுஆய்வு வழக்கு..! திங்கட் கிழமை தீர்ப்பு..! எகிறும் எதிர்பார்ப்பு..!!