தமிழக அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது என்றும், சிறைக்கைதிகள் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு இன்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
தமிழகச் சிறைகளில் நீண்ட காலமாக வாடும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யத் தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுநர் நிராகரித்தார். இதனை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், இந்த விவகாரம் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டது.

நீதிபதிகள் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே. இளந்திரையன் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு இரண்டு முக்கியக் கேள்விகளை ஆராய்ந்தது: தண்டனைக் குறைப்பு மற்றும் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? எந்தெந்தச் சூழல்களில் ஆளுநர் தன்னிச்சையாகச் செயல்பட முடியும்?
இதையும் படிங்க: தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!
மாநிலத் தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி மட்டுமே செயல்பட முடியும். உச்சநீதிமன்றத்தின் சம்ஷேர் சிங் மற்றும் மரு ராம் வழக்குத் தீர்ப்புகளின்படி, ஆளுநர் ஒரு பெயரளவிலான தலைவர் (Symbolic Head) மட்டுமே. பேரறிவாளன் வழக்கிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என வாதிட்டார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தண்டனைக் குறைப்பு மற்றும் முன்கூட்டியே விடுதலை செய்யும் அரசின் அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும், அதில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. ஆளுநர் என்பவர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர். என தீர்ப்பு வழங்கினர்.
இந்தத் தீர்ப்பு, தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் அதிகாரப் போட்டிக்கு ஒரு முக்கிய முற்றுப்புள்ளியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அமைச்சரவை பரிந்துரை செய்த கைதிகளின் விடுதலைக்கான வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமா! புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! மம்தா கடும் கண்டனம்!