உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த கட்டணமில்லா தரிசன வசதியை, வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி வரை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்துத் திருக்கோயில் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா மிக விமரிசையாக நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் இன்று செப்டம்பர் 20-ஆம் தேதி வரை அனைத்துப் பக்தர்களும் கட்டணமின்றி அம்மனைத் தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கும்பாபிஷேகத்திற்குப் பிறகான மண்டலாபிஷேக வழிபாடுகள் மற்றும் விடுமுறை தினங்கள் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வெளிமாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் மதுரைக்குத் திரண்டு வந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... அதிகாரிகள் தலையில் இடியை இறக்கிய நீதிமன்றம்...!
கோயில் வளாகம் மற்றும் வெளிப் பிரகாரங்களில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அலைமோதி வருவதால், எளிய மக்களும் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்காமல் எளிதாக இறைதரிசனம் பெறும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு மற்றும் விரைவு தரிசனக் கட்டணங்கள் ஏதுமின்றி, அனைத்துப் பக்தர்களும் வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி வரை இலவசமாகவே அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பாகவும் நெரிசலின்றி தரிசனம் செய்வதை உறுதி செய்யக் கூடுதல் வரிசைத் தடுப்புகள், குடிநீர் வசதிகள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மதுரை AIIMS..! வெளி நோயாளிகள் பிரிவு எப்போது செயல்படும்.? நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்..!!