மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழகக் கோவில்களில் அன்னதானம் வழங்குவதற்குத் தடை கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இன்று அதிரடியாகத் தள்ளுபடி செய்தது. அன்னதானம் என்பது ஒரு தர்மச் செயல்; அதை ஒரு தலைவரின் பெயரில் நடத்துவதில் தவறில்லை என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கோவில்களில் அன்னதானம் வழங்கத் தடை கோரிய மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒரு குறிப்பிட்ட நபரின் பெயரில் அன்னதானம் நடத்தப்படுவதை எந்த வகையிலும் தவறு எனக் கருத முடியாது. அன்னதானம் என்பது அடிப்படையில் ஒரு உன்னதமான தர்மச் செயல். பசியால் வாடும் ஏழைகளுக்கு உணவு வழங்குவதைக் குறை கூற முடியாது எனத் தெரிவித்தனர்.
கோவில் நிதியைப் பயன்படுத்துவது குறித்த ஆட்சேபனைக்குத் பதிலளித்த நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைச் சட்டப்படியே, ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காகக் கோவில் நிதியைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உணவளிப்பது என்பது ஆன்மீக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கோவில்களின் அடிப்படை அறப்பணிகளில் ஒன்று எனச் சுட்டிக்காட்டியது.
இதையும் படிங்க: 'ஜனநாயகன்' படத்தை ஒளிபரப்பிய உள்ளூர் சேனல்! கோவையில் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது!

தமிழக அரசின் இந்த முடிவை ஆதரித்துக் கருத்து தெரிவித்த நீதிபதிகள் அரசு சமூக ஒற்றுமையையும், சாதி ஒழிப்பையும் மேம்படுத்தும் நோக்கில் இத்தகைய கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்துவது சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் ஒரு செயலாகும் எனக் குறிப்பிட்டனர்.
மனுதாரரின் வாதங்களில் முகாந்திரம் இல்லை எனக் குறிப்பிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, அண்ணா நினைவு தினத்தில் அன்னதானம் வழங்கத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் உள்ள முக்கியக் கோவில்களில் பேரறிஞர் அண்ணா நினைவு தின அன்னதான நிகழ்வுகள் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சமூகநீதி மற்றும் அறநிலையத் துறைச் செயல்பாடுகளுக்குக் கிடைத்த முக்கிய அங்கீகாரமாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!