தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், ஜந்தர் மந்தரில் வேலை கேட்டுப் போராடும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கண்ணீரை வெற்று 7.8 சதவீத ஜிடிபி புள்ளிவிவரங்களால் இனி மூடி மறைக்க முடியாது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தியின் கட்டுரை பாஜக அரசின் வெற்று விளம்பரப் பொருளாதாரத்தை ஆதாரங்களுடன் தோலுரித்துக் காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொழில் முதலீட்டை பெருக்குகிறோம் என்று கூறி 2019ஆம் ஆண்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கிய வரிச்சலுகையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் 100 பில்லியன் டாலர் அதாவது சுமார் எட்டு லட்சம் கோடி ரூபாய் என்று மாணிக்கம் தாகூர் சுட்டிக்காட்டினார். இவ்வளவு சலுகைகள் கொடுத்தும் தனியார் நிறுவனங்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றார்.

மாறாக தங்கள் லாபத்தை பதுக்கிக் கொண்டன என்றும், கடந்த பத்தாண்டுகளாக தனியார் முதலீடுகள் 14 சதவீதத்தில் இருந்து 10 முதல் 12 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.மின்சாரப் பயன்பாடு, வங்கி கடன் வளர்ச்சி, நுகர்வு உள்ளிட்ட எந்தவொரு உண்மையான பொருளாதாரக் குறியீடுகளோடும் கள எதார்த்தம் பொருந்தவில்லை என்பதை முன்னாள் பொருளாதார ஆலோசகரே சுட்டிக்காட்டியுள்ளதாக மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!
வேலைவாய்ப்பின்றி தெருவில் நிற்கும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி துளியும் கவலைப்படாமல் ஏட்டளவிலான புள்ளிவிவரங்களை மட்டும் ஊதிப் பெருக்கிக் காட்டுவது அப்பட்டமான மோசடி என்று அவர் வலியுறுத்தினார்.ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி மக்களின் வாங்கும் திறனிலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிலும்தான் இருக்கிறது எனக் கூறிய அவர், களத்தில் வரலாறு காணாத வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் தாண்டவமாடும் சூழலில் நரேந்திர மோடி அரசு காட்டும் இந்த அதீத ஜிடிபி எண்கள் அனைத்தும் தனது படுதோல்வியை மறைக்க செயற்கையாக கட்டமைக்கப்பட்ட வெறும் போலி பிம்பங்களே என்று தெளிவாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னையில் அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு! முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கூண்டோடு கைது!