இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த நாளாக இந்து சமயத்தில் கொண்டாடப்படுகிறது. 2026-ல் அஷ்டமி திதி செப்டம்பர் 4 அதிகாலை தொடங்கி, செப்டம்பர் 5 நள்ளிரவில் முடிகிறது; கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக ஐதீகம் இருப்பதால், முக்கியமான வழிபாடுகள் இன்று இரவு முதல் அதிகாலை வரை நடைபெறுகின்றன.
கிருஷ்ண ஜெயந்தி ஏன் கொண்டாடப்படுகிறது?
இந்து சமயப் புராணங்களின்படி, விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாக ஸ்ரீகிருஷ்ணர் கருதப்படுகிறார். துவாபர யுகத்தில் மதுரையில் தேவகி–வசுதேவருக்கு மகனாக கிருஷ்ணர் பிறந்ததாக நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: போராட இடம் ஒதுக்குவது பெருமையா..? தூய்மை தேவதைகள்... புகழ்ந்தால் போதுமா CM.. TTV தினகரன் காட்டம்..!
அப்போது மதுராவை ஆட்சி செய்த கம்சன், தனது சகோதரி தேவகியின் எட்டாவது குழந்தையால் தனக்கு மரணம் ஏற்படும் என்ற அசரீரியைக் கேட்டு, தேவகி மற்றும் வசுதேவரைச் சிறையில் அடைத்ததாகவும், அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை கொன்றதாகவும் புராணக் கதை கூறுகிறது.
எட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறந்தபோது, வசுதேவர் அவரை சிறையிலிருந்து கோகுலத்திற்கு அழைத்துச் சென்று, நந்தகோபர்–யசோதையின் பாதுகாப்பில் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் வளர்ந்த கிருஷ்ணர் கம்சனை அழித்து, தர்மத்தை நிலைநாட்டியவர் என்ற நம்பிக்கை இந்த விழாவின் முக்கிய ஆன்மிக அடிப்படையாக உள்ளது. இதனால் கிருஷ்ண ஜெயந்தி என்பது வெறுமனே ஒரு பிறந்தநாள் கொண்டாட்டமாக இல்லாமல், தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டுதல், தர்மத்தின் வெற்றி, பக்தி மற்றும் அன்பின் முக்கியத்துவம் ஆகியவற்றை நினைவூட்டும் விழாவாகக் கருதப்படுகிறது.
ஏன் நள்ளிரவில் கொண்டாடுகிறார்கள்?
புராண நம்பிக்கையின்படி, கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தார். அதனால்தான் பெரும்பாலான கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தியின் முக்கிய நிகழ்வுகள் நள்ளிரவை மையமாகக் கொண்டிருக்கின்றன. பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் பஜனை, கீர்த்தனை, கிருஷ்ண நாம ஜபம் உள்ளிட்டவற்றில் ஈடுபடுகின்றனர். நள்ளிரவில் கிருஷ்ணரின் பிறப்பை குறிக்கும் வகையில் சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆரத்தி மற்றும் பிரசாத விநியோகம் நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நள்ளிரவு முதலே கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் களைக்கட்டியது. இங்குள்ள பாங்கே பிஹாரி கோயில், இஸ்கான் கோயில், பிரேம் மந்திர், ராதாரமண் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் சிறப்பு அலங்காரம், பஜனை, கீர்த்தனை, ராஸலீலா மற்றும் நள்ளிரவு வழிபாடுகள் நடைபெற்றன.
சி.எம்.விஜய் வாழ்த்து:
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை மக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துப் பதிவில், அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில்
மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு... சட்டசபையில் இருந்து ஓடிய முதல்வர்..! லியோனி தாக்கு.!!