தமிழ்நாட்டில் ஆறு இடங்களில் வெயில் சுட்டெரித்த போதிலும், பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
செப்டம்பர் மாதத்திலும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. திருச்சியில் 103 டிகிரியும், மதுரை விமான நிலையம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 102 டிகிரியும் வெயில் கொளுத்தியது. ஈரோடு மற்றும் பரங்கிப்பேட்டையிலும் வெயில் சதம் அடித்தது.
சென்னையில் நேற்று மாலை முதல் அவ்வப்போது கனமழை பெய்தது. எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், அமைந்தகரை, கோயம்பேடு, வடபழனி, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதையும் படிங்க: சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க... மழைநீர் தேங்க வாய்ப்புள்ள பகுதிகள்?... மாநகராட்சி ஷாக்கிங் அறிவிப்பு...!
வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், பூவிருந்தவல்லி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது.
திருவள்ளூர், பூண்டி, தாமரைப்பாக்கம், கடம்பத்தூர், மணவாள நகர், திருமழிசை ஆகிய இடங்களில் பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது.
மதுரையில் அண்ணாநகர், மாசி வீதிகளில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலூர், கள்ளந்திரி, வெள்ளாரிப்பட்டி, வெள்ளாலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்தது.
இதனிடையே, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ் வளிமண்டலத்தில் நிலவும் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக, இன்று மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொளந்தெடுக்கப்போகும் கனமழை... இன்று எங்கெல்லாம் வெளுத்து வாங்கப்போகுது தெரியுமா?