தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைமை அலுவலகத்தில் இன்று புதிய உறுப்பினர் இணைப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பனையூர் த.வெ.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பல்வேறு அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கட்சியில் இணைந்தனர்.
த.வெ.க. பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் இந்த இணைப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, வெங்கட் ரமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கோமதி சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், பிரபல நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் த.வெ.க.வில் இணைந்து புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கினர்.
விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “த.வெ.க.வில் இணையும் ஒவ்வொரு தலைவருக்கும் உரிய அங்கீகாரமும் பொறுப்பும் வழங்கப்படும். அவர்களின் அனுபவமும் திறமையும் கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பலமாக அமையும்” என்று உறுதியளித்தார். இந்த நிகழ்வு த.வெ.க.வின் விரிவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப தயாரா..? டிஆர்பி ராஜாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்..!!

நடிகர் மன்சூர் அலிகான் தனது உணர்வுகளை பகிர்ந்துகொண்டபோது, “நாங்கள் பிரிந்தால்தானே சேர்வதற்கு வாய்ப்பு உருவாகும். இணையாமல் இருந்தால்தானே இணைவதற்கு மனம் வரும். முதலமைச்சர் விஜய்க்கு ஆரம்ப காலத்திலிருந்தே நான் ஆதரவு தெரிவித்து வருகிறேன். லியோ பட வெற்றி விழாவில் ‘தமிழகத்தின் நாளைய தீர்ப்பு’ என்று கூறியிருந்தேன். அது இன்று நனவாகியுள்ளது. முதலமைச்சர் விஜயின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இன்று த.வெ.க.வில் இணைந்துள்ளேன். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக அவர் இருப்பது உறுதி” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் போன்ற மூத்த தலைவர்களின் வருகை த.வெ.க.வுக்கு கூடுதல் வலிமையைப் பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. த.வெ.க.வின் இந்த இணைப்பு நடவடிக்கைகள் தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கட்சியின் அடிப்படை கொள்கைகளான மக்கள் நலன், இளைஞர் வளர்ச்சி, தமிழ் உரிமை ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல இந்தப் புதிய உறுப்பினர்கள் தங்களது முழு ஆதரவையும் அளிப்பார்கள் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி TVK தான்..! திமுகவுக்கு ஓட்டு போடுவது ஆறாவது கடமையா..? நிருபர் கேள்வியால் காதர் மொய்தின் ஆவேசம்..!