சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வார விடுமுறை கொண்டாட்டங்களுக்காக சொந்த ஊருக்குச் சென்றிருந்த மக்கள் இன்று சென்னை திரும்பி வரும் போது, சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று, ஊர்ந்து செல்லும் காட்சி காணப்படுகிறது.
தேர்தல் ஒட்டுப்பதிவுக்குப் பிறகு, திருச்சி, கடலூர், விழுப்புரம், தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நாளை அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் சென்னை நோக்கி பயணித்து வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் இன்று காலை முதலே போக்குவரத்து நெரிசல் உருவாகியது.
குறிப்பாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவு பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள், கார்கள், மினி வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்ச்சியாக சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. இதனால் சிங்கபெருமாள் கோவில் முதல் திருத்தேரி வரை வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் வாகனங்கள் முழுமையாக நின்று நெரிசலில் சிக்கியதால், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.
இதையும் படிங்க: கோவை வடக்கா? மொடக்குறிச்சியா? அண்ணாமலை களமிறங்குவது எங்கே? பாஜக வட்டாரங்களில் கசிந்த தகவல்!

போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போலீசார் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இருப்பினும், தொடர்ந்து வாகனங்கள் அதிக அளவில் வருவதால் நெரிசல் நீடித்து வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மதிய நேரங்களில் நெரிசல் அதிகமாக இருந்தது.
தேர்தல் முடிந்த உடனேயே ஏற்பட்ட இந்தப் பெரும் போக்குவரத்து நெரிசல், சென்னை நகருக்குள் நுழையும் பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் தாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் பயணத்தில் செலவழித்ததாகக் கூறுகின்றனர். சிலர் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்தி நெரிசலைத் தவிர்க்க முயற்சித்தனர்.
போக்குவரத்து போலீசார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். “நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளைத் தவிர்த்து, மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துங்கள். அத்தியாவசியப் பயணங்களை மட்டும் மேற்கொள்ளுங்கள். பொறுமையுடன் இருங்கள்” என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தேர்தல் முடிவடைந்த பிறகு ஏற்பட்ட இந்தப் பெரும் வாகன நெரிசல், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று முழுவதும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஜோசியர் கொடுத்த வார்னிங்! அண்ணாமலை ஜகா வாங்கியதின் பின்னணி!! போட்டியிடாததன் காரணம் இதுதானா?