தமிழ்நாடு அரசு, 2025-26 கல்வியாண்டிற்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான புதிய கட்டண விவரங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிக கட்டண வசூல் புகார்களைத் தடுக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய கட்டண அமைப்பின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கட்டணம் ₹4.35 லட்சம் முதல் ₹4.50 லட்சமாகவும், மேனேஜ்மென்ட் இடங்களுக்கு ஆண்டுக்கு ரூ.13.5 லட்சமும், சுயநிதி பல்கலைக்கழகங்களில் ரூ.16.2 லட்சமும், என்ஆர்ஐ இடங்களுக்கு ₹29.40 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர, விடுதி, உணவு, போக்குவரத்து மற்றும் இதர கட்டணங்கள் தனியாக வசூலிக்கப்படும். உணவுக் கட்டணம் ரூ.70,000 முதல் ரூ.1.35 லட்சம் வரையும், போக்குவரத்து கட்டணம் ரூ.50,000 முதல் ரூ.1.75 லட்சம் வரையும், இதர கட்டணம் ரூ.36,000 முதல் ரூ.3 லட்சம் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி ரூ.25,000-லாம் வேண்டாம்.. வெறும் ரூ.2,500 போதும்.. தமிழக அரசு அறிமுகப்படுத்திய சூப்பர் திட்டம்..!!
இந்தக் கட்டணங்கள் கல்லூரிக்கு ஏற்ப மாறுபடலாம். இந்தப் புதிய நடைமுறையின் மூலம், கட்டண வசூலை வெளிப்படையாகவும் ஒழுங்காகவும் நிர்வகிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு செமஸ்டரிலும் கட்டணத்தை அரசுக்கு மின்னணு முறையில் செலுத்த வேண்டும், இதனால் பல குறைபாடுகள் தவிர்க்கப்படும். மேலும், முதல் கவுன்சிலிங்கில் தனியார் கல்லூரியில் சேர்ந்து, பின்னர் அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால், முதலில் செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும், 4 சுயநிதி பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும். இதனால், மாணவர்களின் நிதிச்சுமை குறைந்து, மருத்துவக் கல்வியில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் புதிய கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறிவித்த தமிழக அரசு, பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டணத்தை சற்று குறைவாக நிர்ணயித்துள்ளது.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகைக்காக இத்தனை லட்ச விண்ணப்பங்களா..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!