மேகமலை மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு, தமிழக அரசுக்கு நான்கு பக்கங்கள் கொண்ட நிலை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
இந்த விவகாரம் அகஸ்தியர் மலைத்தொடரின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டது. ஸ்ரீவில்லிபுத்தூர்-மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் சுமார் 4,601 குடும்பங்கள் 5,072 ஹெக்டேர் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வு கோரிக்கையுடன் இணைந்த இந்த வழக்கு, ஜான் கென்னடி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களின் அடிப்படையில் உருவானது.

நீதிமன்றம், வனப்பகுதிகளைப் பாதுகாப்பதே முதன்மை என்றும், ஆக்கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தது. முன்னதாக சில குடும்பங்களுக்கு மறுகுடியமர்வு வழங்கப்பட்டாலும், ஒட்டுமொத்த முன்னேற்றம் மெதுவாக உள்ளதாக குறிப்பிடப்பட்டது.இன்று நடைபெற்ற விசாரணையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டனவா, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இலவம்பஞ்சு தோட்டங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: கவின் ஆணவக் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து..! கோர்ட் அதிரடி உத்தரவு..!
சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நீதிபதிகள், விரிவான விசாரணைக்காக வழக்கை பிற்பகல் வரை ஒத்திவைத்தனர். தொடர்ந்து நான்கு பக்க அறிக்கையை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தனர்.இதற்கிடையே மேகமலை மற்றும் வருசநாடு பகுதிகளில் உள்ள 98 கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கருதக் கூடாது என்றும், வன உரிமைச் சட்டத்தின் கீழ் உரிமைகள் வழங்க வேண்டும் என்றும் கோருகின்றனர்.
இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்திற்கு எதிராக NGT-யில் வழக்கு... திட்டம் நிறுத்தப்படுமா? விசாரணை..!!