தமிழ்நாட்டில் இந்த வார இறுதி நாட்களுடன் சேர்த்து ஆயுத பூஜை விடுமுறை நாள் வர உள்ளது. அதனை முன்னிட்டு, சென்னையில் தங்கி பணிபுரியும் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுப்பர். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் 6,199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவித்தார்.
கடந்த முறை அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்திருந்தது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், போதுமான அளவு பேருந்து இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் ஆம்னி பேருந்து கட்டணங்களும் விண்ணை முட்டியது பொதுமக்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு, நேற்று இரவு முதலே சென்னையில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். இதனையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன், நேற்று இரவு ஆட்டோவில் சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டார். அப்போது பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர், உரிய வசதிகளை செய்து கொடுக்காத அதிகாரிகளை சரமாரியாக சாடினார்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு... எங்கிருந்து, எங்கெல்லாம் சிறப்பு பேருந்துகள் இயக்கம்?
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருக்கிறோம். குடிநீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டு, பயணிகள் எந்தவித இடையூறும் இல்லாமல் தங்களது ஊர்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம்.
பயணிகள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். நீங்களே பாருங்கள், அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். பயணிகள் மகிழ்ச்சியுடன் தங்களது ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள்.
ஒலிபெருக்கி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கும் ஒலிபெருக்கி வசதி உள்ளது. எந்தெந்த பேருந்துகள் எந்தெந்த ஊர்களுக்குச் செல்கின்றன என்பதைக் குறிப்பிடும் பலகைகளையும் பேருந்துகளுக்கு வெளியே வைத்திருக்கிறோம்.
அதிகாரிகளும் அங்கு பணியில் இருக்கிறார்கள். பயணிகள் கூட்டமாக நின்றுகொண்டிருக்கும் போது, அவர்கள் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கேட்டு, அவர்களைத் தனித்தனியாகப் பிரித்து அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் ஒரே இடத்தில் கூட்டமாக நிற்கிறார்கள். அவர்களைப் பிரித்து, அந்தந்த பேருந்துகள் நிற்கும் இடங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
நானும் வரும்போது பார்த்தேன். போக்குவரத்து நெரிசல் மழையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. மழை இல்லையென்றால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கூட ஆட்டோவிலும் காரிலும் செல்கிறார்கள். அதனால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
உண்மையிலேயே தேவையான அளவுக்குப் பேருந்துகள் இருக்கின்றனவா? இன்னும் கூடுதலாகப் பேருந்துகளை இயக்க வேண்டுமா என்பதைப் பயணிகள்தான் சொல்ல வேண்டும். இங்குள்ள பயணிகளிடம் அனைத்தையும் கேட்டேன். எந்தக் குறையும் இல்லை என்றும், ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நீங்கள் சொல்வதைப் போல, போக்குவரத்து நெரிசலுக்கு மழைதான் காரணம். மழை பெய்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்கூட ஆட்டோவிலும் காரிலும் செல்கிறார்கள். அதனால்தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு ஆட்சியாளர்களோ, நாங்களோ காரணமல்ல என்றார்.
இதையும் படிங்க: இன்று 6 மாவட்டங்களுக்கு வச்சாச்சு குறி... அறிவிக்கப்பட்டது ‘ஆரஞ்சு அலர்ட்’... எங்கெல்லாம் தெரியுமா?