ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, சென்னையிலிருந்து இன்று 14,963 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஆயுத பூஜையும், 20ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகின்றன. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு விடுமுறைகளும் சேர்ந்து தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் தங்கி வேலை பார்ப்பவர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
இதனால் பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், சென்னையிலிருந்து நேற்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக இயக்கப்படும் 8,764 பேருந்துகளுடன் கூடுதலாக 6,199 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 14,963 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை..! சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் தமிழன் பார்த்திபன் அறிவிப்பு..!
பயணிகளின் வசதிக்காக, சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கம் அருகே உள்ள தற்காலிகப் பேருந்து நிலையம், மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையம், கோயம்பேடு மற்றும் மாதவரம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே, கால்நடைப் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து வந்தவாசி, போளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலை வழித்தடங்கள், காஞ்சிபுரம், வேலூர், பெங்களூரு, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் வகையில், புன்னை, பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், வழக்கமாக திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
இந்த ஐந்து இடங்களிலும் பேருந்து சேவைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்றுமுதல் பயணிகள் அதிகளவில் தென் மாவட்டங்களை நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி சம்பவத்தில் திடுக் திருப்பம்... நேராக கரும்பு தோட்டத்திற்குள் சென்ற மோப்ப நாய்... நடந்தது என்ன?