இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக தமிழகத்தில் பெரும் சர்ச்சையும், எதிர்க்கட்சிகளின் கடும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. அஜித் குமார் என்ற இளைஞர் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.அவர் விசாரணையின்போது உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக காவல்துறை முதலில் தெரிவித்தது. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் 44 காயங்கள் இருந்தது உறுதியானதைத் தொடர்ந்து, இது காவல் நிலையத்தில் நடந்த கொடூரமான தாக்குதலால் ஏற்பட்ட மரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கோயிலில் இருந்த சிசிடிவி காட்சிகளை காவல் உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாகவும், சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. நீதிமன்றம் கூட இதனை உறுதி செய்தது. இந்த மரணம் திமுக ஆட்சியில் 25-வது காவல் நிலைய மரணம் எனவும், இது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் தோல்வியை வெளிப்படுத்துவதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர். மேலும், 2021 முதல் தமிழகத்தில் 24 காவல் மரணங்கள் நடந்ததாகவும், இது காவல்துறையின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார். அஜித்குமாரின் உடல் விரைவாக எரிக்கப்பட்டதாகவும், இது ஆதாரங்களை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் அடையாளம் "நான் முதல்வன்".. ஒரு அப்பாவாக ரொம்ப பெருமை! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

தொடர்ந்து, பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நீதிபதிகள் இது சாதாரண கொலை அல்ல அடித்தே கொலை செய்துள்ளார்கள்., கொடூர கொலை என்று தெரிவித்தனர். கொலை செய்பவர் கூட இப்படி தாக்கி இருக்க மாட்டார் என்றும் மிருகத்தனமாக தாக்கி கொலை செய்தீர்கள் எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். காவலர்கள் கைது என்பது கண் துடைப்பு தான் என்று தெரிவித்த நீதிபதிகள், பிறப்புறுப்பில் கூட மிளகாய் பொடி போடப்பட்டிருப்பதாகவும், உடம்பில் காயம் இல்லாத இடங்களில் இல்லை என்றும் ஒரு மாநிலம் தன் குடிமகனையே கொலை செய்து விட்டதாகவும் அதிருப்தி தெரிவித்தனர்.

பிறகு, அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. சாட்சியங்கள் அழிக்கப்பட்டதாகவும், காவல்துறையின் செயல்பாடு குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. தொடர்ந்து வழக்கு விசாரணையை எட்டாம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் சிபிசிஐடி சிறப்பு குழு நியாயமான விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி இருந்தனர்.

இந்த நிலையில் அஜித் குமாரின் தாயார், சகோதரரை சந்தித்து அமைச்சர் பெரிய கருப்பன், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். அப்போது அரசின் நிவாரணங்களை உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார். இதனுடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஜித் குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அஜித் குமார் சகோதரருக்கு நிரந்தர வேலை வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார். மேலும் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்று தருவோம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: முழுக்க முழுக்க காவல்துறை அராஜகத்தால் நடந்த "கொலை"! முதல்வர் பதில் சொல்லியே ஆக வேண்டும்.. இபிஎஸ் கொந்தளிப்பு..!