தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இதழியல் வரலாற்றில் முக்கியமான பங்கு வகிக்கும் முரசொலி செய்தித்தாள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான குரலாகவும், தமிழ்நாட்டின் சமூக, அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிக்கும் ஊடகமாகவும் திகழ்கிறது.
1942-ஆம் ஆண்டு மு. கருணாநிதியால் தொடங்கப்பட்ட இந்த இதழ், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவும், சமூகநீதி, பகுத்தறிவு, சமத்துவம் போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது.
முரசொலியின் பயணம் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மு. கருணாநிதியின் 18-வது வயதில் தொடங்கியது. இரண்டாம் உலகப் போர் காலத்தில், காகிதப் பற்றாக்குறை உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியில், திருவாரூரில் உள்ள கிருஷ்ணா பிரஸ் அச்சகத்தில் முரசொலி முதன்முதலில் துண்டுப் பிரசுரமாக வெளியிடப்பட்டது.
இந்தப் பத்திரிகையைத் தொடங்குவதற்கு கருணாநிதி நண்பர்களுடன் சேர்ந்து நிதி திரட்டி, ஆயிரத்திற்கும் குறையாத பிரதிகளை அச்சிட்டு விநியோகித்தார். தொடக்கத்தில், முரசொலி திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்புவதற்கு ஒரு கருவியாகவும், பகுத்தறிவு மற்றும் சமூகநீதி குறித்த கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகமாகவும் செயல்பட்டது.

இந்த நிலையில் முரசொலி இதழ் தொடங்கப்பட்டு 84 ஆண்டுகள் ஆகிறது. இது தொடர்பாக பெருமிதம் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மூத்த அண்ணனுக்குப் பிறந்தநாள் என்று கூறினார். நெருப்பாறுகள் பல நீந்தி, கழகத்தின் மனச்சாட்சியாக,தமிழ்நாட்டின் உரிமைக்குரலாக ஒலிக்கும் முரசொலிக்கு அகவை 84 என்று தெரிவித்தார்.
அரசியலில் தெளிவு, வரலாற்றில் ஆழம், இன உணர்வில் தீரம், கலை, இலக்கியத்தில் செழுமை எனச் செயல்படும் தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையை வாழ்த்துவதாக கூறியுள்ளார்.
இன்றைய செய்திகளைப் பதிவு செய்து, கருத்தாழமிக்க கட்டுரைகளால் சிந்தனையூட்டி நாளைய வரலாற்றை எழுத உணர்வளிக்கும் முரசொலியின் பயணம் என்றென்றும் தொடரட்டும் என்றும் குறிப்பிட்டார்.