தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தனது கழக உடன்பிறப்புகளுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தமிழ்நாட்டின் நலன் காக்கும் திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டுவதிலும் கலைஞர் முன்னெடுத்த மாநில சுயாட்சி முழக்கத்தின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களின் நலன்களையும் காக்கச் சட்டப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தார்.
நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான் என்றும் தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருவதாக கூறினார்.
உண்மையான அ.தி.மு.க தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார் பழனிசாமி என்றும் சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொச்சையா பேசாதீங்க...காமராஜர் ஏசி போட்டு தூங்கினாரா? கொந்தளித்த தமிழிசை

முதலமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசை எதிர்த்து, தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அவர்கள் தினமும் போராடி வருவதாகக் கூறியுள்ளதாகவும், மத்திய அரசு தினமும் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வழங்கி வருவதாக தெரிவித்த அவர், மக்கள் போராடுகிறார்கள் என்று ஏன் சொல்கிறீர்கள் என்றும் திமுக அரசின் தவறான நிர்வாகத்தால் மக்கள் போராடி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆனால், அவர்கள் அனைத்து தவறான நிர்வாகத்தையும் மறைத்து, மக்களிடம் செல்வதாகக் கூறுகிறார்கள் என்றும் மக்கள் ஒவ்வொரு நாளும் அரசு அலுவலகங்களை அணுக முடியும்., ஆனால் இப்போது அவர்கள் முகாம்களை நடத்தி மக்களை ஈர்ப்பதாகச் சொல்கிறார்கள் எனவும் கூறினார். எனவே, இப்படி எழுதுவதற்கு மு.க. ஸ்டாலினை நான் வன்மையாக கண்டிப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: செய்தி தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள்... எங்க போகுது திராவிட மாடல் அரசு? தமிழிசை சரமாரி கேள்வி..!