சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் அருகே உள்ள கீழடி அகழாய்வுத் தளத்தின் அருகிலேயே 4.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.24.30 கோடி செலவில் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக இதைத் திறந்து வைத்தார். இந்தத் திறப்பு விழா மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்றது. ஏனெனில் கீழடி அகழாய்வுகள் தமிழர்களின் சங்க கால நாகரிகத்தைப் பற்றிய புதிய புரிதலைத் தந்துள்ளன.
இங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டடங்கள், வடிகால் அமைப்புகள், தமிழி எழுத்துகள் பொறித்த பாண்டங்கள் போன்றவை அப்படியே திறந்தவெளியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, பண்டைய மக்கள் வாழ்ந்த அதே இடத்தில், அவர்களின் வாழ்வியலை நேரடியாக உணரும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு பெரிய அரங்குகளாக 65,000-க்கும் மேற்பட்ட சதுர அடியில் அமைக்கப்பட்ட இந்த இடத்தில், பழங்கால செங்கல் அமைப்புகளைப் பாதுகாத்து, விளக்கப் பலகைகள், செல்பி பாயிண்ட் போன்றவையும் உள்ளன.

'கீழடி நம் தாய்மடி' என்ற எழுத்துகளுடன் கூடிய இடங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே 2023-இல் திறக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர் என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இப்போது இந்தத் திறந்தவெளி அருங்காட்சியகம் சேர்ந்ததால், கீழடி இன்னும் அதிக அளவில் மக்களை ஈர்க்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: தாயின் மடியில் இருந்தே குழந்தை கடத்தப்படும் அவலம்..! நீதி கிடைக்கணும்... திமுக அரசுக்கு விஜய் கண்டனம்..!
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறக்கப்பட்டு இருப்பதாகவும் தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருப்பதாக குறிப்பிட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் நாவாய், ஈரோடு மாவட்டம் நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருப்பதாகவும், தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம் என்றும் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: நீங்க தோத்துப்போன இடத்தை தான் கேக்குறோம்...! அதிகார பகிர்வு அவசியம்... மாணிக்கம் தாகூர் தொடர் வலியுறுத்தல்..!